கலையும் வாழ்வும்
தமிழ் நாடகங்கள் - கற்காலம் முதல் தற்காலம் வரை
-சுரேஷ்வரன்-
அனைவருக்கும் வணக்கம். ‘’கலையும் வாழ்வும்’’ என்கிற தலைப்பின் கீழ் ஒரு சிற்றுரை. உள்ளபடி உரை
ஆற்றுவதை விட உரையாடுவதில் விருப்பம் கொண்டவன் நான். நான் பேச, நீங்கள் கேட்க என்றில்லாமல் நாம் பேசுவோம். நாம் அறிந்ததை, நாம் உணர்ந்ததை, நம்மை நமக்குள்
பகிர்ந்து கொள்வோம். அதற்கான இடம் (SPACE) இங்கு இருக்கிறது என்பதை திடமாகக் கவனத்தில் கொள்ளுங்கள்.
சரி.
‘கலை’
என்பது ஒரு பொதுச்சொல். ஆய கலைகள் அனைத்தும் அதற்குள் அடங்கும். இங்கு, இப்போது
‘கலை’ என்பது குறிப்பாக நாடகக்கலையைச் சுட்டுவதாகக்
கொண்டு மேற்செல்வோம்.
நாடகம் ஒரு
நிகழ்த்துகலை வடிவம் (PERFORMING ARTS). பார்வையாளர்களுக்கு முன் நிகழ்த்திக் காட்டப்படுகிற ஒரு கலைவடிவம். குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட நேரத்தில், உயிர்ப்புள்ள பார்வையாளர்களுக்கென, உயிர்ப்புள்ள நடிகர்களால் நிகழ்த்திக் காட்டப்படுகிற ஒரு கலை வடிவம் ! பார்வையாளன் சுவாசிக்கிறான். நடிகனும் சுவாசிக்கிறான். நடிகன், பார்வையாளன்... இவர்களுக்கு இடையிலான
உறவின் இந்த உயிர்ப்புமிக்க நேரடித் தன்மை இக்கலை
வடிவத்தை பிற கலை வடிவங்களோடு ஒப்பிடுகிறபோது வீரியம் மிக்க ஒன்றாக இதனைக் கருதவைக்கிறது.
என்னைப் பொறுத்தவரை கலையோ, இலக்கியமோ அவற்றின் ஆகச்சிறந்த பணி என்பது மனித ஆன்மாவை சுத்திகரிப்பது. அவ்வகையில், உயிர்ப்புமிக்க, நேரடித்தன்மைகொண்ட, வீரியம் மிக்க, தனது தனித்துவத்தால் மேம்பட்ட ஒன்றாக இருக்கிற இந்நாடகக் கலைவடிவம் குறித்துப் பேச ஒரு வாய்ப்பினைத் தந்திருக்கிற சித்தூர் அரசு கலைக்கல்லூரியின் தமிழ்த் துறைக்கும், இந்நிகழ்வைச் சாத்தியமாக்க முயன்ற முருகன் அய்யா உள்ளிட்ட அனைவருக்கும் எனது வணக்கம். அத்தோடு, கேரளம் ஆயினும் தமிழை சுவாசித்துக் கொண்டிருக்கும் உயிர்ப்பு மிக்க உங்களோடு இந்நாளைக் கொண்டாடுவதில் உள்ளபடி மிகுமகிழ்ச்சி கொள்கிறேன் !
நாடகக் கலையின் தோற்றம்
நாடகக் கலை எப்போது தோற்றம் கண்டிருக்கும் ? அது குறித்து நாம் சற்று சிந்திப்போமே.
சொல்லுங்கள். நாடகக் கலை எப்போது தோற்றம் கண்டிருக்கும்
?
என்னைப் பொருத்தவரை, நாடகக்கலைக்கான
முதல் விசை
நிகழ்ந்திருக்கக் கூடிய காலம்.. வரலாற்றிற்கு முற்பட்ட காலம் ! PREMITIVE
AGE ! ஆதி
மனிதன் உணவுக்காகவும் உறைவிடத்திற்காகவும் அக்காலகட்டத்தில் பெரிதும் சார்ந்திருந்தது காட்டை. அதே தேவைகளின்
பொருட்டு, அதே காட்டை
சார்ந்திருந்தவைகள் விலங்குகள் மற்றும் பிற உயிரினங்கள் என்பதை நாமறிவோம்.
இப்போது ஒரு
சிறு கற்பனை. உணவுக்காக என்று
வைத்துக்கொள்ளுங்கள். பொருள் ஒன்று. ஆனால் தேவை
என்பதோ இருவருக்கு. உதாரணத்திற்கு, சிறு முயல் ஒன்றிற்காக மனிதனும் புலியும் ஒருவரோடு ஒருவர் போட்டியிட்டிருக்கலாம் தானே ? அல்லது, முயல்
கூட கிடைக்காத ஒருபொழுதில், மனிதனும்
புலியும் யார் யாருக்கு உணவாகப் போகிறார்கள் என்கிற சூழலில், ஒருவரோடு ஒருவர் பொருந்தியும் இருக்கலாம் தானே ? WHAT
A DRAMATIC SITUATION !
மனிதன் வென்ற
அந்த தருணத்தில், உயிர் தப்பியதோடு உணவையையும் வென்றெடுத்த அந்த சந்தோஷத்தை அவன் பிற மனிதனோடு, அல்லது அவன்
சார்ந்த சமூகத்தோடு அவன் பகிர முற்பட்டிருக்கலாம் தானே ? நிகழ்ந்திருக்க அதிசாத்தியமுள்ள ஒரு கற்பனை இது ! அந்த அடிப்படையில்
சொல்கிறேன். ஒருவனோ அல்லது பலரோ சேர்ந்து ஆடிய அந்த வேட்டையை அவர்கள் சார்ந்த சமூகத்தின் முன், அவர்கள்தம் குடும்பத்தின்
முன் மீண்டும் அவர்கள் தம் உடல் வழி, குரல்
வழி... ஒருவன் புலியாக, மற்றவர்கள் பாய்ந்து சூழ, ஆடிய
வேட்டையை மீண்டும் அவர்கள் தம்இனக்குழுவின்முன் நிகழ்த்திக் காட்ட... அவ்வினக்குழுவும் அவர்களோடு சேர்ந்து பயந்து, அவர்களோடு சேர்ந்து
பாய்ந்து, அவர்களோடு சேர்ந்து மானசீகமாய் வேட்டையாடி... அந்நிகழ்வின் முடிவில் அவ்வினக்குழு அவ்வேட்டையாடிகளைக் கொண்டாடி
இருக்கலாம் தானே ? அவ்வாறு இருப்பின், தோழமைகளே, அந்நிகழ்த்துதலில்
உள்ள நிகழ்கலையின் கூறுகளை உங்களால் இனங்காண முடிகிறதா ?
முடிகிறதெனில், இனங்காணப்பட்டவைகள்தாம் என்ன ?
நடிகன், கதாபாத்திரமேற்பு, பார்வையாளர், பொழுதுபோக்கு... இவை மட்டும்தானா ? EDUCATION
! ENTERTAINMENT – டோடு
அவ்வினக்குழுவின்
அடுத்த தலைமுறை வேட்டையின் நுட்பங்களை அந்நிகழ்த்துதலிலிருந்து கற்றுக்கொண்டிருக்கும்
தானே ? ENTERTAINMENT + EDUCATION நிகழ்த்துகலையின் அம்சமல்லவா ?
ஆக,
வேட்டைச் சமூகத்திலேயே வேர்கொண்ட கலை தமது நாடகக்கலை. அது தற்போது
நாம் காண்கிற வடிவில் முறைப்படுத்தப்பட்ட ஒன்றாக இல்லாதிருக்கலாம். ஆனால் வழியற்ற வனத்தில் ஆதிமனிதனின் பாதங்கள் நடந்து நடந்து உருக்கொண்ட முரட்டுப் பாதை அது. அது
அப்படி RAW
–
வாகத்தான் இருந்திருக்கும்.
கலை இலக்கியங்களின் தோற்றம்
பிற்பாடு மழைபொய்த்து காடு கருகிய ஒரு காலத்தில், நீர் தேடியும்,
உணவு தேடியும் காட்டாற்றின் வறண்ட சுவடு பற்றித் தொடர்ந்தவன் நிலம் தொட்டான். தேங்கிக் கிடந்த
நீரருகே தங்கிப்போனான். விதைக்குள்
உறங்கும் காட்டை கண்டுகொண்டவன் நிலம் கீறி,
அப்போது பயிர் செய்யக் கற்றுக்கொண்டான். அவனது மனதும்
மண்ணோடு சேர்ந்து பண்பட்டது.
இயற்கையை, தான் வெல்லமுடியாத இயற்கையின் கூறுகளை, வணங்கத்தலைப்பட்டிருந்தவனின்
நம்பிக்கை, முன்னோர்
வழிபாடு, நடுகல் வழிபாடு, சிறுதெய்வ
வழிபாடு, பெருந்தெய்வ
வழிபாடு என்று அடுத்தடுத்த பரிமாணங்களை எட்டியது. அப்போது குடும்பம் குடும்பமாக வேறு வாழத்
தலைப்பட்டிருந்தான் அவன். வாழ்க்கை ஒரு
நெறிமுறைக்கு உட்பட்டதாய் இருக்கவேண்டும் என்று அவன் உணர, வாழ்வியல்
மதிப்பீடுகள் உருக்கொண்டன. இதேசமயத்தில், வேட்டைச்
சமூகத்திலிருந்து மாறுபட்ட விவசாய சமூகத்தில் அவனுக்குப் போதிய ஓய்வும் கிடைத்தது. அவ்வேளைகளில்
தன் கற்பனையின் துணைகொண்டு படைப்பாற்றல் தளத்தில் நடைபோடத்துவங்கினான் அவன். அப்போது
உருக்கொண்ட கலை இலக்கியங்கள் அவனது இறை நம்பிக்கைகளையும், அவனது வாழ்வியல்
மதிப்பீடுகளையும் மக்களிடம் கொண்டுசேர்ப்பதில் பெரும்பங்காற்றின. அவ்வகையில் நாமறிந்த, நமது மரபுக்கலை
வடிவமான கூத்தின் பங்களிப்பு அளப்பரியது.
கூத்து
கூத்து, தமிழ் மரபுக் கலை வடிவம் ! கூத்து குறித்து சங்க இலக்கியங்களில் ஏராளமான குறிப்புகள் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். இது ஊர்ப் பொது இடத்தில், திறந்த வெளியில், அல்லது கோவில் வளாகத்தில் நிகழ்த்தப்படுகிறது. என்றாலும், பீமன் பகாசுரனை வதம் செய்வதை கூத்தாடும்போது, நடிப்பு மேடையைத் தாண்டி, கிராமத்துத் தெருக்களில், பகல் பொழுதில் பீமன் வேடமிட்டவன் ஒரு மாட்டு வண்டியில் பகாசுரனுக்குக்க கொடுப்பதற்கான உணவுப்பொருட்களை ஊர் மக்களிடமிருந்து உண்மையாலுமே சேகரிப்பான். மக்கள் அவனை ஆரத்தி ஏந்தி வழிபட்டு, பொருட்களைத் தருவார்கள். இங்கு பார்த்தீர்கள் எனில், ஊரே மேடையாக மக்கள் ஒரே நேரத்தில் பார்வையாளர்களாகவும் பங்கேற்பாளர்களாகவும் ஆகியிருக்கிறார்கள் ! இப்படி மக்களின் நம்பிக்கைகளோடு கூத்து இரண்டரக் கலந்திருப்பதை நாம் காணலாம். கூத்து மட்டுமில்லை நமது பெரும்பாலான கலை வடிவங்களும் இப்படி கோவில் சார்ந்த, கோவில் திருவிழாக்கள் சார்ந்த, கோவில் சடங்குகளின் ஒரு அங்கமாக இருந்திருப்பது கண்கூடு.
கூத்து தொழில் முறையாக ஆகியிராத காலத்தில் கிராமத்து மக்கள் தன் விவசாயப்
பணிகளை முடித்துவிட்டு வந்து இரவு முழுவதும் ஆடுவார்கள். பல நாட்கள் தொடர்த்து நடத்தப்படும் கூத்து, பிற்பாடு தொழில்முறைக் குழுக்களால் ஆடக்கூடியதாக
ஆகியது. பலநாட்கள் என்பதுபோய் வெறும் மூன்று மணி நேரம் என்கிற
அளவில் அது சுருங்கிப்போய்விட்டது. ரிக்கார்டு டேன்ஸ், டி.வி., சினிமான்னு அதற்கு எண்ணற்ற சவால்கள் ! கிட்டத்தட்ட அழிவின் விளிம்பிற்குச் சென்றுவிட்ட இம்மரபுக்கலை வடிவத்தை
மீட்டெடுக்கும் நடவடிக்கையை அரசு தக்க சமயத்தில் எடுக்க, புராண, இதிகாசங்களைத்
தாண்டி நவீனப் படைப்பாக்கங்களையும் உட்கிரகித்துக்கொண்டு, தமிழ்
மரபுக்கலை வடிவமாக இப்போது
அது முன்னிருத்தப்பட்டு, உலக
அரங்கில் மேடையேற்றம் கண்டுவருகிறது.
காலமாற்றத்தை உட்கிரகித்துக்கொள்ளாத எதுவொன்றும் அழிந்துபோகும் என்பது மறுக்கமுடியாத ஒன்று. அவ்வகையில் கூத்து கண்டுகொண்டிருக்கிற இம்மாற்றம் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒன்றுதான், புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றுதான் !
பார்ஸி தியேட்டர்
ஆங்கிலேயர்களின் வருகைக்குப்பின் நமது கலை, இலக்கிய
அணுகுமுறைகள் பெரும் மாற்றத்திற்கு உள்ளாயின. அவர்களது நாடக முறைமைகளின்
தாக்கம் மற்றும் ‘இந்திர சபா’ என்கிற பக்தியை
மையப்படுத்திய இசைநாடகங்களின் பாதிப்பு, இரண்டும் சேர்ந்து பார்சி நாடகக் கம்பெனிகள் மகாராஷ்டிரத்தை மையமாகக்
கொண்டு தோற்றம் பெற்றன. பிற மாநிலங்களுக்கும் அதன்
செயல்பாடுகள் பரவின. நமக்கு தற்போது நன்கு பரிட்சயமாகிவிட்டிருக்கிற “PROCINIUM THEATRE” அமைப்பு
பார்சி நாடகக் கம்பெனிகள் நமக்கு அறிமுகப்படுத்தியவைகள்தான்.
‘THEATRE’
என்கிற பதம் நமது சூழலில் உள்ளபடி
அப்போதுதான் பிரயோகத்திற்கு வந்தது. பார்வையாளர்களை முன்னிருத்தி நடத்தப்படும்
நிகழ்கலைவடிவங்களை அது சுட்டியது.
நிகழிடம், நிகழ்த்தப்படும் கலை மற்றும்
அக்கலைவடிவின் உள்ளார்ந்த கூறுகள் அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு சொல்லாக இன்று அது பேருரு கொண்டிருக்கிறது. அரங்கம், அரங்கச் செயல்பாடுகள், அரங்கியல் என்கிற பதப்பிரயோகமும் அவ்வழியில் இன்று பெரிதும் அதிகரித்துள்ளமை கண்கூடு.
சபா நாடகங்கள்
தமிழ் நாட்டில் பார்சி நாடகளின் தாக்கம் பெற்று தஞ்சாவூரில் கோவிந்தசாமி ராஜூ என்பவரால் ‘மன மோகன நாடக கம்பெனி’ உருவானது. அதேபோல் பல்லாரி கிருஷ்ணமாச்சார்லுவின்
‘சரச வினோதிதி சபா’-வும்.
அவ்விரு சபாக்களின் தாக்கத்தால் பம்மல் சம்பந்த முதலியார் 1891, ஜூலை 1-ல்
‘சுகுண விலாச சபா’-வை தோற்றுவித்தார். நீதிபதியான
பம்மல் சம்பந்த முதலியார் தொண்ணூற்றுக்கும் அதிகமான நாடகங்களை எழுதியிருக்கிறார்.
ஷேக்ஸ்பியரின் ஆங்கில நாடகங்கள் பலவற்றையும், அதேபோல்,
வடமொழி நாடகங்கள் சிலவற்றையும் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.
கூத்திலிருந்து பெரிதும் மாறுபட்டு, இயல்பான தோற்றம், மிகைப்படுத்தாத
நடிப்பு, நடைமுறை பேச்சு வசனம், காட்சியமைப்புத்
திரை என்று புதுவகையில் காட்சிகொண்ட அவரது நாடகங்கள் பெருவரவேற்றைப் பெற்றன.
அவரால் தாக்கம் பெற்று பல சபாக்கள் உருவாயின. ‘தமிழ் நாடகத் தந்தை’ என இன்றளவும்
அவர் நினைவுகொள்ளப்படுகிறார்.
பாய்ஸ் கம்பெனி
அதேபோல், ‘ஒரு நாடகம் சிறப்பாக
இருக்க வேண்டுமானால், அந்த நாடகத்தில் பங்குகொள்ளும் நடிகர்களிடையே
ஒழுங்கும் நியதியும் கட்டுப்பாடும் இருக்கவேண்டும்.’ என்ற பார்வையோடு
தவத்திரு.சங்கரதாஸ் சுவாமிகள் ‘சமரச சன்மார்க
நாடக சபா’- என்கிற நாடகக் குழுவொன்றை 1910-ஆண்டு துவக்கினார். இதில் சிறுவர்களை மட்டுமே இணைத்துக்கொண்டு, பயிற்சி அளித்து
அவர்களையே நடிகர்களாக்கிக் கொண்டார். பெண்கள்
நடிக்க முன்வராத காலகட்டம் அது. பெண்
கதாபாத்திரங்களை, புராண இதிகாசக் கதாப்பாத்திரங்களை அச்சிறுவர்களே ஏற்று நடித்தனர். அதனாலேயே அத்தகைய
நாடகக் குழுக்களுக்கு பாய்ஸ் கம்பெனி என்று பெயர் வந்தது.
30-ற்கும் மேற்பட்ட நாடகங்கள் சங்கரதாஸ்
சுவாமிகளுடையது. பிற குழுக்கள் கூட அவரது நாடகங்களை எடுத்தாளுவதும் உண்டு. அத்தோடு நாடகத்தைத் தொழிலாகக்கொண்ட சபாக்களுக்கு உரையாடல்களை எழுதிக்கொடுத்து, நாடகப் பேச்சு முறையையும் வகுத்தார் அவர்.
பாய்ஸ் கம்பெனி தொடங்கிய பிறகு சங்கரதாஸ்
சுவாமிகள் நான்கு ஆண்டுகள்தான் உயிர் வாழ்ந்தார். அதற்குள் அவரால் பட்டை தீட்டப்பட்டு ஏராளமானவர்கள்
உருவாகியிருந்தனர். அவரை ‘தமிழ்
நாடகத் தலைமையாசிரியர்’ என்று இன்றளவும் கொண்டாடி மகிழ்கிறது தமிழ் சமூகம்.
வீதி நாடகம்
காலனி ஆதிக்கத்தின்
வழி நாம் கண்டுகொண்ட மற்றொரு கலைவடிவம் ‘STREET
THEATRE’ என்கிற
‘வீதிநாடகம்’. தொழிற்புரட்சியின் விளைவான முதலாளி வர்க்கத்தின் ஆதிக்கத்திற்கு எதிராக, மக்கள்தம் உரிமையை
நிலைநாட்ட மக்களால்
கண்டடையப்பட்ட ஒரு போர்க்குணம் மிக்க மக்கள் கலைவடிவம் அது. நமது
சூழலிலும் வீதி நாடகத்தை அதன் வீரியத்தோடு கையாண்டவர்கள் பலர். அப்படிக் கையாண்டதாலேயே
சப்தர் ஹஷ்மி கொல்லப்பட்டதைக் கூட நாமறிவோம்தான்.
இன்று வீதி
நாடகம் அதன் அரசியல் உள்ளடக்கத்தை இழந்துவிட்டது. அரசின் நலத்திட்டங்கள் சார்ந்த, விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் சார்ந்த
கருத்துகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கிற ஒரு ஊடகமாக அது சுருங்கி விட்டிருக்கிறது. இருந்தும் அது வீதி நாடகம் என்றே அழைக்கப்பட்டு வருகிறது. போகட்டும் !
இது இப்படி
இருக்க, நமது மரபுக்கலை
வடிவமான தெருக்கூத்தும் STREET
THEATRE என்றே
ஆங்கிலத்தில் சுட்டப்படுகிறது. தெருவில், மக்கள் மத்தியில்
நிகழ்த்தப்படுவதாலேயே அவர்கள்
இவை இரண்டையும் ஒன்றேபோல் பாவித்திருக்கின்றனர். இது உள்ளபடி பேரபத்தம் !
நவீன நாடகம்
மேற்கத்தியவர்களின் வருகையாலும், அவர்கள்தம் கல்வி முறையாலும் இலக்கியத்துறையில் நமக்கு அறிமுகமான சிறுகதை,
நாவல் வடிவங்களைப்போலவே, நாடகத்துறையில் நமக்கு
அறிமுகமான மற்றொன்று நவீன நாடகங்கள். நவீனம் என்பதை ஆங்கிலத்தில்
“MODERN” என்கிற சொல்
சுட்டும். அதற்கு “OF TODAY” என்று பொருள். ‘’இன்றைக்கானது’’
என்பது நவீனம்.
மேற்கில் நவீனத்துவம் தோன்ற பல்வேறு காரணங்கள் இருந்தன. குறிப்பாக, பிரான்சிலும்
அமெரிக்காவிலும் ஏற்பட்ட அரசியல், பொருளாதாரப் புரட்சிகள்.
மற்றும் இங்கிலாந்தில் ஏற்பட்ட ‘தொழிற்புரட்சியாகப் பார்க்கப்படுகிற
இயந்திரப் புரட்சி’. அதேபோல, முதல் மற்றும்
இரண்டாம் உலகப்போர்கள். கடவுள் மறுப்புக் கருத்தாக்கங்கள்.
இவையெல்லாம் மக்கள் மனதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தன.
அவை கலை இலக்கியங்களில் எதிரொலித்தன. இயல்புவாதம்,
யதார்த்தவாதம், குறியீட்டுவாதம், காவிய அரங்கு, அபத்தவாதம் என்று நாடகத்தில் நவீனத்துவம்
அடுத்தடுத்தத் திருப்பங்களை அங்கு கண்டது.
உள்ளபடி நாடகத்தில் நவீனத்துவம் என்பது பல்வேறு காலகட்டங்களில், பிற கலை இலக்கிய வகைமைகளில் ஏற்பட்ட மாற்றங்கள்
மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகளின் தாக்கம் பெற்றும் கூட உருவான ஒன்றாகத்தான் இருக்கிறது.
மரபை ஒட்டியும் வெட்டியும் என பல்வேறு விதப்பட்ட போக்குகள் அதில் உள்ளன.
இந்தியாவில் நவீன நாடகங்கள்
சென்ற நூற்றாண்டின் 60,
70 -களில் தமிழ்ச் சூழலில் மேற்கத்திய நவீனத்துவக் கோட்பாடுகளின் தாக்கம் தீவிரம் பெற்றது.
அதனைத்
தொடர்ந்து நவீன நாடகப்பிரதிகள் எழுதப்பட்டன. அவற்றை மேடையேற்ற நவீன நாடகக் குழுக்கள் உருவாயின. நடிகர்களுக்கு பிரத்யேகமான
பயிற்சிமுறைமைகள் வடிவம்கொண்டன. நாடகப்
பிரதி மற்றும் அவற்றை மேடையேற்றுவதற்கான உத்தி இரண்டு தளத்திலும் பல்வேறுவிதப்பட்ட சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன.
அதேசமயத்தில் நாடகத்தில்
இந்திய மற்றும் தமிழ்த் தன்மை என்பது குறித்த தேடலும் எழுச்சி கொண்டது. தமிழ் மரபுக்
கலைவடிவமாக கூத்து அப்போதுதான்
இனங்காணப்பட்டது. நாட்டிய சாஸ்திரத்தின் அடிப்படையில் இந்தியத் தன்மையைக் கட்டமைக்கமுடியுமா என்கிற விவாதமும்
நிகழ்ந்தது.
சங்கீத நாடக
அகாடமி மற்றும் தேசிய நாடகப்பள்ளி-யின் செயல்பாடுகள் நவீன நாடகத்தின் திசைவழியில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. மேற்கத்திய கோட்பாடுகளை அப்படியே உள்வாங்குவது, அவ்வாறில்லாமல் நம் சூழலுக்கேற்ப, மரபை முற்றிலுமாய் புறமொதுக்கிவிடாது நவீனத்துவத்தை தகவமைப்பது என்ற அடிப்படைகளில் பல்வேறுபட்ட போக்குகள் இன்று
இங்கு நிலவுகின்றன.
நவீன நாடகங்கள் எதிர்கொள்ளும் சவால்கள்
ஆயினும் நமது இந்திய
மற்றும் தமிழ்ச் சூழல்களில் அனைத்து சோதனை முயற்சிகளும் ஒன்றுசொன்னாற்போல் ஒரே ஒரு விமர்சனத்தை எதிர் கொள்கின்றன. அது ‘நவீன
நாடக்கள் புரியவில்லை’ என்பதுதான்.
நவீன நாடகம்
மட்டுமில்லை நவீன இலக்கியம், நவீன நடனம், நவீன இசை, நவீன
ஓவியம் என்று எதுவும் புரியவில்லைதான். நான் கேட்கிறேன் மரபு மட்டும் புரிந்துவிட்டதா ? உரையில்லாமல் நம்மால் சங்க இலக்கியங்களை வாசிக்கமுடிகிறதா ?
உள்ளபடி முடியும். இலக்கணம் புரிந்தால் அனைத்தும் புரியும். தேவை முயற்சி. ARRANGERD
MARRIAGE –ல் என்ன நடக்கிறது ? முன்னப் பின்ன பார்த்ததும் இல்லெ, பழகனுதும் இல்லென்னு
கல்யாணம் முடிந்த கையோடு ஓடியா வந்துடறோம் ? சேர்ந்து வாழ்ந்து ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதில்லையா ? நவீனம் என்பது புதிய பார்வை ! புதிய மொழி ! புதிய வெளிப்பாடு ! கற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள். நிச்சயம் அது வசப்படும்.
நவீனமோ, மரபோ
அவற்றின் ஆகச்சிறந்த படைப்புகளில் ஒரு பெருங்கனவு இருக்கும். அது நம்மை, நமது உலகத்தை மேம்படுத்தக்கூடுவதாய் இருக்கும். இரசவாதிப்பதாய் இருக்கும். அவ்வகையில்
ஒன்றை அழுத்தமாய்ச் சொல்லவேண்டுமெனில், கலை வாழ்வைப் பிரதிபளிப்பதைவிட, கலையை வாழ்வு பிரதிபளிக்க வேண்டும். கலையோ, இலக்கியமோ
இதுதான் நம் வாழ்வை கவித்துவமிக்கதாக, கலைத்துவமிக்கதாக ஆக்கிக்கொள்வதற்கான வழி. ‘கற்க,
கற்ற பின் நிற்க அதற்குத் தக !’ வள்ளுவன் வாக்கல்லவா ! உங்கள் அனைவரது வாழ்வும் கவித்துவம்
பெற்று ஒளிர எனது வாழ்த்துகள் !
நன்றி. வணக்கம்.