- சுரேஷ்வரன் –
1913,
மே 3, உயிர்த்த இந்திய சினிமாவுக்கு இவ்வாண்டு 100-வது ஆண்டு ! இன்றைய முழுநீளத் திரைப்படங்களின்
முன்னோடிப்படமான ‘ராஜா ஹரிச்சந்திரா’ தாதா சாகேப் பால்கே அவர்களால் தயாரித்து இயக்கப்பட்டு
அன்றைய தினத்தின் மாலை 6 – 7.30 மணிக்குத் திரையிடப்பட்டது. அதனை நினைவு கூறுமுகமாய்
தமிழக அரசு தென்னிந்திய திரைப்பட வர்த்தகக் கழகத்துடன் இணைந்து இந்திய சினிமாவின் இந்நூறாமாண்டுக்
கொண்டாட்டத்தை குத்தாட்டம்போட்டுத் தீர்த்தாகியும்விட்டது. கொண்டாடுவதற்கான கடப்பாடு
தென்னிந்திய திரைப்பட வர்த்தகக் கழகத்துக்கு ஈடாக தமிழக அரசிற்கும் நிச்சயம் உண்டு.
5 முதல்வர்களும் இன்னமும் முதல்வர் கனவோடிருக்கும் அனேகரும் திரைத்துறையின் நட்சத்திரங்களல்லவா
?
சினிமா
பெருவாரியான மக்களை எளிதாகச் சென்றடைவதற்கான சரியானதொரு ஊடகம். அதனை அரசியல் கட்சிகள்
உட்கிரகித்துக் கொண்டதைப் போலவே, வியாபாரிகளும் உட்கிரகித்துக்கொள்ள, இலாப வேட்டைமட்டுமே
சினிமாவின் ஆகச்சிறந்த நோக்காகிவிட்டது பெருந்துயரம்தான் ! உள்ளபடி கலை கலைக்காக, கலை
மக்களுக்காக என்றெல்லாம் இங்கொன்றும் இல்லை. கலை காசுக்காக என்பதே திரையின் தாரக மந்திரம்
!
இருந்தும்
இப்பெருமக்களுக்கான ஊடகத்தை கலை நேர்த்தியோடும் மக்கள் நல நோக்கோடும் கையாண்ட வெகு
சிலராலேயே திரை மற்ற கலைச் செயல்பாடுகளுக்கிடையில் தனக்கான தனித்ததொரு அடையாளத்தை அடைந்திருக்கிறது.
இத்திசை வழியிலான முயற்சியை முன்னெடுத்த கலைஞர்கள் உலக அளவில் கணிசமானோர்தான். அக்கணிசத்தில்
இந்திய அளவில் எத்தனை பேர், இந்தியாவின் மொழிவாரியான மாநிலங்களலவில் எத்தனை பேர் என்கிறதொரு
கேள்வியை எழுப்பிக்கொண்டு உற்று நோக்க, இங்கு பண்டங்களின் குவியல் பெருமலை போல எனில்,
படைப்புக்களின் குவியலோ ஒரு சிறு குன்றளவிற்குக்கூட இல்லை ! பெருத்த அயர்ச்சிதான்
! அதுவும் குறிப்பாக வங்காள, மராட்டிய, கேரளத்து பங்களிப்புகளோடு ஒப்பிட, தமிழகத்தின்
பங்களிப்பு போதிய அளவில்கூட இல்லை என்பதே நிதர்சனம். நல்லவேளையாக மாற்றுத்திரை நோக்கிய
குரல்கள் தமிழ்ச் சூழலில் சற்று உரக்க தற்போது ஒலிக்கத்துவங்க, அதுகொண்டு சில படைப்பாக்க
முயற்சிகள் நடந்தேறுவது நம்பிக்கைகொள்ள வைக்கிறது.
இந்திய
அளவில் மத்திய மாநில அரசுகளின் நூறாமாண்டுக் கொண்டாட்டங்களில் வசூலை வாரிக்குவிக்கும்
படங்கள் நல்ல படங்கள் என்கிற கண்ணோட்டத்திலிருந்து மாறுபட்ட, ‘ஒரு கலைப்படைப்பின் ஆகச்சிறந்த
பணி என்பது ஆத்ம சுத்திகரிப்பே’ என்கிற வகையில் உன்னதமான படைப்பாக்க முயற்சிகளை மேற்கொண்ட
முன்னோடிகளையும் அவர்கள்தம் படைப்புக்களையும் நாம் கவனப்படுத்தி இருக்கவேண்டும். அத்தோடு,
அவர்கள்தம் திசைவழியில் நம்பிக்கையோடு பயணிக்க போதிய அங்கீகாரத்தையும் ஊக்கத்தையும்
இன்றைய திரைக்கலைஞர்களுக்கு அரசு தம்மளவில் அளித்திருக்கவும் வேண்டும். அது நிகழவில்லை.
அவ்வாறு நிகழ்வதற்கான அழுத்தம் கலை இலக்கியத் தளங்களிலிருந்து எழுந்திருக்க வேண்டும்.
அதுவும் எழவில்லை. துரதிருஷ்டம்தான் ! நமக்கு விமர்சனம் என்கிற பெயரில் நல்ல முயற்சிகளை
காயடிக்க மட்டும்தான் தெரியுமோ என்று சுயகேள்வியொன்றை
கலை இலக்கியக் கலகக்காரர்கள் தமக்குள் எழுப்பிக்கொண்டாகவேண்டிய காலகட்டம் இது !
இப்படியான
நடப்புப் பின்னணியில் மத்திய அரசின் சாகித்திய அகாதெமி தனது இலக்கியத் தளத்திலிருந்து
திரையின் மீதும் தனது கவனத்தைத் திருப்பி இருப்பது, அதுவும் தமிழ்ச் சூழலில், மிகுந்த
காலதாமதத்திற்குப் பிறகானதுதான் எனினும் பெரிதும் வரவேற்பிற்குரியது ! கடந்த செப்டம்பர் மாதம் 20 மற்றும் 21 திகதிகளில்
‘தமிழ்த் திரைப்படத்தில் இலக்கியத்தின் தாக்கம்‘ என்கிற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கை
சாகித்திய அகாதெமி நிகழ்த்தியது. இலக்கியத்திற்கும் திரைக்குமான இணக்கத்தையும் பிணக்கத்தையும்
கவனப்படுத்தி, இரண்டிற்குமிடையே ஒரு உரையாடலை அது முன்னெடுத்திருக்கிறது. குத்தாட்டக்
கோலாகலத்திற்கிடையே அக்கருத்தரங்கு சற்று ஆசுவாசப்படுத்தக் கூடியதாய் இருக்கிறது.
இலக்கியமும்
திரையும் அதனதன் அளவில் தனித்துவமானவை. எழுத்து மொழியும் காட்சி மொழியும் இருவேறு அடிப்படைகளில்
இயங்குபவை. எனினும் வாழ்வின் யதார்த்தம் என்பது
இரண்டிற்கும் ஒன்றுதான். யதார்த்தத்தின் ஆழ அகலங்களில் பெருமீனென நீந்தும் எழுத்து
கண்டு சொன்னவை இலக்கிய உச்சங்கள் ! எண்ணிக்கையில் அது கூடத்தான். காட்சியோ ஆகாயத்தில்
மினுங்கும் நட்சத்திரங்களை மீன்களென எண்ணித் தூண்டில் போடும் கற்பனையில் தன்னை ஆழ்த்திக்கொள்ள,
திரை கனவுத் தொழிற்சாலையாகி விட்டிருக்கிறது. யதார்த்தத்தில் காலூன்றிய திரை ஆக்கங்கள்
குறைவுதான். இந்தளவில் இலக்கியம் திரைக்கு எந்தளவில் தனது பங்களிப்பை நிகழ்த்த முடியுமெனில்
கதை என்கிற கூறுதான் முதலில் கவனத்திற்கு வருகிறது.
இலக்கியத்தையும்
திரையையும் இணைக்கும் பாலம் என்பது திரைக்கதை
! கதையைச் சொல்லுவது இலக்கியம், அதுவே காட்டுவது திரை என்றாகிறது. எழுத்துப் பதிவைக்
காட்சிப் பதிவாக்கும்போது திரைக்கலைஞன் எதிர்கொள்ள நேரும் சவால்கள் பல. இலக்கியம் என்பது
எழுத்தறிவு பெற்ற மக்கள் சமூகத்திற்கானது. திரை அனுபவம் என்பது அனைவருக்குமானது. இலக்கியப்
பிரதியை தேவையெனில் நிறுத்தி நிதானமாய் வாசித்துக்கொள்ள முடியும். திரை அனுபவம் என்பதோ
காட்சிகளின் தொடர் ஓட்டத்தால் மட்டுமே சாத்தியப்படக்கூடியது. குறிப்பிட்ட காலவரையறைக்குள்
அந்த அனுபவத்தை பார்வையளனுக்குள் கடத்தியாக வேண்டியிருக்கறது. அதற்காய் அவனது கவனத்தை
தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள முனைகிறது திரை. காட்சிப்பூர்வமாய்க் கதையைச் சொல்வதில்
அது பல்வேறு உத்திகளைக் கையால்கிறது. தனித்தனியான சொற்களை குறிப்பிட்ட வரிசையில் வைக்க
அது முழுமையானதொரு அர்த்தத்தைத் தருவதுபோல, செறிவான காட்சித் துண்டுகளை இணைத்து அர்த்தத்தை,
உணர்வை, அனுபவத்தைக் கட்டியெழுப்ப முனைகிறது அது. திரைமொழி செறிவுறுகிறது !
கதை
என்பது பொதுவாக சம்வங்களின் கோர்வை ! ஒரு சிறுகதையை முழுநீளத் திரைப்படமாக்குவதற்கு
சம்பவங்களை சேர்க்க வேண்டியிருக்கிறது. அதேபோல் ஒரு நாவலைத் திரைப்பதிவாக்க சம்பவக்
குறைப்பும் சேர்ப்பும் நிகழ்வதற்கான சாத்தியப்பாடு அதிகம்தான். சமயங்களில் கதையின்
கதாபாத்திரங்களும் குறைப்புக்கும் புதிதான சேர்ப்புக்கும் ஆளாவதுண்டு ! ஒரு எழுத்துப்
படைப்பு இயக்குநர் வழி மறு ஆக்கத்திற்கு உள்ளாகும்போது இத்தகைய மாற்றங்கள் தவிர்க்க
முடியாததாகிறது. ஆயிரம் சொற்களால் விவரித்துச் சொல்லப்பட்ட ஒரு தெருமுனையை, ஒரு காட்சித்துண்டு
அழுத்தமாய் ஒரு சில வினாடிகளில் நம்முன் நிறுத்திவிடும். இது திரையின் ஆகப்பெரும் சாத்தியம்
எனில், சொற்களுக்கு மட்டுமே சிக்கும் கதாபாத்திரத்தின் உள்ளார்ந்த மனவோட்டங்களை காட்சிப்படுத்துவது
என்பது திரைக்கு உள்ளபடி ஒரு சவால்தான். ஆக, இத்தகைய சவால்களை எதிர்கொள்கிற விதத்தில்
திரை தனக்கான மொழியை கூர்மைப்படுத்திக் கொள்கிறது என்கிறபோது இலக்கியம் திரைமொழியை
மேம்படுத்த உதவுகிறது என்றுதான் சொல்லவேண்டும்.
திரையின்
காட்சிப்பூர்வமான கதை சொல்லலை, அதன் சாத்தியங்களை உள்ளபடி உள்வாங்கிக் கொண்ட ஒரு எழுத்தாளன்
திரைக்கான பிரதியை, திரைக்கதையை, எழுத முடியும். திரைக்கதைப் பிரதியாக்கம் அவனது எழுத்தாற்றலுக்கு
விடுக்கும் சவால்களை அவன் எதிர்கொள்ளும் விதத்தில் அவனது எழுத்தாற்றலும் மேம்படவே செய்கிறது.
இலக்கியத்தில் கதை, கவிதை, கட்டுரை என்கிற வடிவங்களை உட்கிரகித்துக்கொண்டது போலவே,
திரைக்கதை வடிவத்தையும் அவனால் கிரகித்துக்கொள்ள முடியும்தான். தேவை விருப்புணருவுடன்
கூடிய முயற்சி !
எழுத்தாளர்களுக்கு
திரைக்கதை எழுத்துப் பயிற்சி போலவே, திரைக்கலைஞர்களுக்கு வாசிப்பின் வாயிலாக, கதையின்
சூழலை, கதாபாத்திரங்களை உட்கிரகித்து கொள்ளுதலின் வாயிலாக, யதார்த்தத்தையும், கற்பனாத்திறனையும் தன்னுள் விரித்துக் கொள்வதற்கான
பயிற்சியும் கிடைக்கிறது. தனது நேரடி அனுபவத்திற்கு உட்படாத சூழல் சார்ந்த மனிதர்களின்
வாழ்வையும் வாசித்தலின் வாயிலாக அவன் தன் அனுபவமாக்கிக்கொள்ள முடியும்.
பாத்திரத்திற்கேற்ற
நடிகனை இயக்குநர் தேர்வு செய்கிறார் என்றாலும் கதாபாத்திரங்களை தன் உடல் மொழியால் உயிர்ப்பிக்கும்
ஒரு நடிகன் இலக்கிய அல்லது திரைப்பிரதியை எவ்வாறு உள்வாங்கிக் கொள்கிறான் என்பதும்
கவனப்படுத்தலுக்கு ஆட்படுத்தப்பட வேண்டியுள்ளது. சமயங்களில் பிரதியின் தன்மை நடிப்புப்
பாங்கைத் தீர்மானித்து விடும். இலக்கிய வழக்கு மிகை நடிப்பு முறையை நிர்ப்பந்தித்துவிடக்கூடும். ஆக,
இலக்கியம் திரையை, திரை நடிப்பை தாக்கத்திற்குள்ளாக்குகிறது என்பதும் கூட உண்மைதான்
!
உள்ளபடி
திரைக்கும் இலக்கியத்திற்குமான உரையாடலைப் போலவே, வாய்மொழி மரபிற்கும் இவைகளுக்கும்,
நாடகத்திற்கும் இவைகளுக்கும் என்பது போல பல்வேறு தளங்களும் கவனத்திற்குட்படுத்த வேண்டியுள்ளது.
சாகித்திய அகாதெமியின் கருத்தரங்கில் பங்கேற்ற எழுத்தாளர்கள் ( நீல பத்மநாபன், பொன்னீலன்,
எஸ். ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன், ஜி. திலகவதி ) , நாடக இலக்கியப் பிரதியாளர்கள் ( ந. முத்துசாமி,
இந்திரா பார்த்தசாரதி, மு. இராமசாமி ) , திரைக் கலைஞர்கள் ( பாலு மகேந்திரா, பாக்கியராஜ்,
ரா.சி.சக்தி, ஞான ராஜசேகரன், சசி, கௌதமன், லெனின், அம்ஷன் குமார், தியோடர் பாஸ்கரன்,
சிவக்குமார், அபிஷேக் ) அவரவர் அனுபவங்களிலிருந்து
பெற்ற கருத்துக்களை முன்வைத்த பாங்கும், நிகழ்வை ஒருங்கிணைத்தோரின் ( மாலன், கே. ஸ்ரீநிவாசராவ்,
கிருஷ்ணசாமி நாச்சிமுத்து, இரா. காமராசு, அ.சு. இளங்கோவன், சம்பத் ) நேரிய உழைப்பும் வணக்கத்திற்குரியது. இது போன்ற கருத்தரங்கங்கள்
கல்லூரி அளவில், திரைப்பட இயக்கங்களால் அந்தந்தப் பகுதிகளில், அரசு மற்றும் தென்னிந்திய
திரைப்பட வர்த்தகக் கழகங்களால் மாவட்டம் தோறும் இவ்வாண்டு முழுவதும் நிகழ்த்தப்பட வேண்டும்.
தமிழ்ச் சமூகத்தின் மீது ஆகப்பெரும் தாக்கத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கும் திரை குறித்த
விழிப்புணர்வை அனைத்து தரப்பு மக்களுக்கும் அது கொண்டுசெல்ல ஏதுவாயிருக்கும். செய்வோமா
..? செய்வோம் ! வாருங்கள் ! ஒரு துளியாய்க் கலந்து அலையாய் எழுவோம் !!
(
‘தமிழ்த் திரைப்படத்தில் இலக்கியத்தின் தாக்கம்‘ என்கிற தலைப்பில் சாகித்திய அகாதெமி
நிகழ்த்திய இரண்டு நாள் கருத்தரங்கில் அரங்கேறிய கருத்துக்களையும் அவை என்னுள் கிளர்த்திய
அனுபவங்களையும் தொகுத்துக்கொண்டதின் சிறு பதிவு இது ! ).
நன்றி : நிழல்
நன்றி : நிழல்

