சினிமாவிற்கான
தோற்றுவாய் காட்சிகளைப் பதிவு செய்யும் புகைப்படக்கலையே ! ஆக, புகைப்படக்கலையின் பிறப்பு
குறித்து முதலில் பார்ப்போம். ஒரு இருண்ட அறைக்குள் சாவித்துவாரம் வழியே ஊடுறுவிய ஒளிக்கற்றையோடு
சேர்ந்து வெளியே இருக்கும் காட்சியானது தலைகீழாகவும் மங்கலாகவும் சுவற்றில் படிவது
காண கருக்கொண்டது புகைப்படக்கலை ! அவ்வாறு சுவற்றில் படியும் காட்சி பிம்பத்தை தெளிவான
பதிவாக எடுத்துவைப்பது எப்படி என்கிற ஆராய்ச்சி முன்னெடுக்கப்பட்டு, லென்ஸ் மற்றும்
புகைப்படச் சுருள் என்கிறவரை படிப்படியாகக் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன. புகைப்படக்
கருவி கையடக்கமாகியது ! புகைப்படக்கலை உருக்கொண்டது !
கினிமா
என்ற கிரேக்கச் சொல்லே ஆங்கிலத்தில் சினிமா என்றானது. அசைவது, நகர்வது என்று அதற்குப்
பொருள். பீட்டர் மார்க் ரோஜெட் என்ற விஞ்ஞானி 1824-ல் வெளியிட்ட , "கண்களில்
உள்ள விழித்திரையானது தன் மீது விழும் காட்சிப் பிம்பத்தை, உண்மை நேரத்தை விட 1/16
நொடி அதிகமாகத் தக்க வைத்துக் கொள்கிறது. அந்த நேரத்துக்குள் விழித்திரையில் விழும்
மற்றொரு பிம்பம் அசையும் தன்மையைப் பெறுகிறது." என்கிற ‘பார்வை நிலைப்புத் தன்மைக் கொள்கை’யே சினிமா-வின்
வளர்ச்சிக்கு அடிப்படை ! ஒரு வினாடிக்கு 16 படங்கள் என்கிற வீதத்தில் அடுத்து அடுத்து வைக்க அசையும்
படம் உருவானது. பயாஸ்கோப், மாஜிக் லேண்டர்ன்,
கைனடாஸ்கோப், வைடாஸ்கோப்பு, ப்ரொஜெக்டர் வழி பிம்பங்கள் அசையும் பிம்பங்களாயின. ஒரு
நிமிட துண்டு படங்கள் பல எடுக்கப்பட்டன. ரயில் வண்டி ஸ்டேஷனை நோக்கி வருவது போன்ற காட்சி
திரையிடப்பட்டபோது, மக்கள் இரயில் தங்கள் மீது மோதவருவதாக எண்ணி பயந்து ஓடினர். நொடிக்கு
16 பிம்பங்கள் என்கிற வீதத்தில் இருந்தபோது பாத்திரங்களின் செயல்கள் இயல்பு மீறியதாக
இருந்தது. படிப்படியாக அண்மைக் காட்சி, தூரக்காட்சி, காட்சிக் கோணம், படத்தொகுப்பு என்று சினிமாவின்
நுட்பம் கூடியது. காட்சி மொழி வித்து கொண்டது.
காட்சிகள்
மட்டுமே பதிவு செய்யப்பட்டு மவ்னப் படங்களாக சினிமா காட்டப்பட்டுக்கொண்டிருந்த அந்தக்
காலகட்டத்தில் நாடகம் தனக்கான இடத்தைத் தக்கவைத்துக்கொண்டுதான் இருந்தது. பிற்பாடு
சினிமா பேசத் துவங்க நிலைமை தலைகீழாகியது. வினாடிக்கு 24 பிம்பங்களென கதாபாத்திரங்களின்
செயல்கள் இயல்புத் தன்மை பெற, கறுப்பு வெள்ளையிலிருந்து வண்ணப்படமாக சினிமா வடிவெடுக்க
அசுர வேகத்தில் வளர்ச்சி கண்டது சினிமா ! திரைமொழி வேர்பிடித்து விருட்சமாய்க் கிளைத்துத்
தளைத்தது !
லூமியர்
சகோதரர்கள் என்றழைக்கப்பட்ட அகஸ்டி
மற்றும் லூயிஸ் லூமியர் இருவரும் முதல் நகரும் படம் எடுத்தனர். வெளியான ஆண்டு
1895. 17 அடி நீளமான பிலிம்மில் இவர்களது படம் ஓடும் நேரம் 50 வினாடிகள் !
தொழிற்சாலையிலிருந்து தொழிலாளர்கள் வெளியே வருவதை படம்பிடித்துக் காட்டினார்கள்.
உலகின் முதல் வீடியோ கேமராவை கண்டுபிடித்தவர்களும் இவர்களே. ஆண்டு அதே 1895 !
இவர்கள் கண்டுபிடித்த சினிமட்டோகிராப் என்னும் கேமராவைக் கொண்டே இவர்களது முதல்
படத்தை எடுத்துள்ளனர். அந்தப் படத்தின் பெயர், La Sortie
des usines Lumière à Lyon அல்லது
ஆங்கிலத்தில் ‘Workers Leaving The
Lumiere Factory’ !
லூமியர் சகோதரர்கள் படம் எடுக்க
ஆரம்பித்தபோதே அவற்றை இங்கு நமது மும்பையிலும் திரையிட்டுக் காட்ட
ஆரம்பித்திருந்தனர். ஆக, இந்தியாவில் திரைப்படம் அறிமுகமாகியது 1895 ஆண்டில் !
இந்தியாவின் முதலாவது மெளனப்படத்தை எடுத்தவர் தாதா சாகிப் பால்கே. படம் ராஜா
ஹரிச்சந்திரா ! வெளியான ஆண்டு 1913. அதனால்தான் நடப்பு ஆண்டை ( 2013 ) இந்திய
சினிமாவின் நூற்றாண்டாக நாம் கொண்டாடி வருகிறோம். இந்தியாவின் முதல்
படத்தயாரிப்பாளர், தியேட்டர் ஓனர் ஜாம்ஷெட்ஜி பிரேம்ஜி மதன். இந்தியாவின் முதல்
பேசும் படம் வெளியான ஆண்டு 1931. படம் ஆலம் ஆரா ! இயக்கியவர் அர்தேஷிர் இரானி. இதே
ஆண்டு தமிழகத்திற்கும் பேசும் படம் வந்துவிட்ட்து குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின் முதல் தயாரிப்பாளர்,
இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் திரு. R. நடராஜ முதலியார். இவரது முதல் படம் “கீசக வதம்”, ஆண்டு 1916.
தென்னிந்தியாவின் முதல் மெளனப் படம் இதுதான். முதல் பேசும் படம் தமிழகத்திற்கு
வந்த ஆண்டு முன்னரே கூறியதுபோல 1931. படம் காளிதாஸ் !
இயக்கியவர் H.M.ரெட்டி. அப்படத்தின் கதாபாத்திரங்கள் பல மொழிகளில் பேசின. முழுக்கவும்
தமிழ் பேசிய படம்/ பாடிய படம் 1933 -ஆம் ஆண்டு வெளியான கலவா
! அர்ஜுனனின் பெருமையைச் சொன்ன இந்தப் படத்தை இயக்கியவர், P.P.ரங்காச்சாரி. 1936
-ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல் பெண் இயக்குனரான T.P.ராஜலக்ஷ்மியின் மிஸ்.கமலா வெளியானது.
தமிழ் சினிமாவின் துவக்கத்தில் மக்கள்
மத்தியில் பிரபலமாயிருந்த புராண, இதிகாச, சமூகக் கதைகளே அதிகம் எடுக்கப்பட்டன.
அத்தோடு சுதந்திரப் போராட்டத்தை முன்வைத்த படங்களும் வெளிவந்தன. கதைகளை நாடகச்
சூழலிருந்து உட்கிரகித்துக்கொண்டது போலவே, நடிகர்களாக மக்கள் மத்தியில்
பிரபலமாயிருந்த நாடக நடிகர்களையே தமிழ் சினிமா அப்போது உட்கொண்டிருந்தது. கூத்து,
நாடகப் பாணியிலேயே பாடல்கள் பெரிதும் இடம்பெற்றிருந்தன. நாயகர்களின் பெயரோடு
“பாகவதர்” இணைந்து இருப்பது வியாபார
உத்தியாகயிருந்தது.
பாடல் விடுத்து, வசனத்தில் தமிழ்
சினிமா கவனம் காட்டத் தொடங்கியது 1945 – 1950களில் தான். வசன காலகட்டத்தில்
திராவிட மற்றும் பொதுவுடைமைக் கருத்துக்கள் பற்றி பேசும் படங்கள் நிறைய வெளிவந்தன.
பாடலின் இடத்தை வசனம் பிடித்துக்கொண்டது. பக்கம் பக்கமாக
வசனங்கள் பேசப்பட்டன. அண்ணாதுரை, கலைஞர் கருணாநிதி போன்றோர் தமது அரசியல்
பிரச்சாரத்திற்கான கருவியாக தமிழ் சினிமாவைக் கைக்கொண்டனர். உலக அரங்கில் சினிமாவின்
காட்சி மொழியின் நுட்பம் கூடிக்கொண்டிருந்த வேளையில், தமிழ்ச் சூழலில் தமிழ்
சினிமா நாடகார்த்தமாகவே வீறுநடை போட்டது. யதார்த்தம் என்பதைவிட மிகைத்தன்மையை சகல
கலை இலக்கியத் தளங்களிலும் மரபாகக் கொண்டிருந்த தமிழ்ச் சமூகம் சினிமாவை மரபின்
தொடர்ச்சியில் வைத்தே கண்டு களித்துக் கொண்டாடிவந்துள்ளமை உற்று நோக்கத்தக்கது !
நாடகக் கொட்டகைகளும் அரிசி ஆலைகளும் திரை அரங்குகளாக மக்கள் பார்த்தது
திரைநாடகங்களாக இருந்தது உள்ளபடி புரிதலுக்குரியதுதான் !
-சுரேஷ்வரன்-
( கூத்துப்பட்டறை
)

No comments:
Post a Comment