Monday, December 30, 2013

மார்க் போடு ! கொண்டாடு !!


தங்க மீன்கள், 
ஓநாயும் ஆட்டுக் குட்டியும் 
மற்றும் 
மூடர் கூடம் திரைப்படங்களை முன்வைத்து . . .

                                            -சுரேஷ்வரன்-

ஸ்வரன் : 

மாற்று ஊடக முயற்சி என்கிற அடிப்படையில் கொண்டாடப்பட்டு வரும் திரைப்பட வரிசையில் தற்போது  தங்க மீன்கள், ஓநாயும் ஆட்டுக் குட்டியும் மற்றும் மூடர் கூடம் ஆகிய மூன்றும் சேர்ந்திருக்கிறது. இந்த சமீபத்திய வரவுகள் குறித்ததுதான் நமது தற்போதைய உரையாடல். 

தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த கருப்பொருள்களான காதல், கிச்சுசிச்சு மூட்டல்கள், ஹீரோயிஸம், குத்தாட்டம் என்பது தவிர்த்த முயற்சிகள் மாற்று திரைப்பட முயற்சியாக இங்கு பார்க்கப்படுகிறது. மாற்று என்பது உங்கள் பார்வையில் எது ?

முருகன் : 

தமிழ் சினிமாவின் கெட்டிதட்டிப்போன நீங்கள் குறிப்பிட்ட பாதையிலிருந்து விலகிய நிலையில் ஒரு திரைப்படம் எடுப்பதற்கு உள்ளபடி ஒரு துணிச்சல் வேண்டும். அத்துணிச்சலோடான முயற்சிகளை ஒரு மாற்றாகத்தான் பார்க்கிறேன். அவ்வகையில் நாம் விவாதத்திற்கு எடுத்துக்கொண்டிருக்கிற மூன்று படங்களிலும் காதல் என்பது மையப்பொருளாக இல்லை. தந்தை மகள் பாசம், மனித நேயம், உறவு முறைகளுக்கிடையிலான சிக்கல்கள் போன்றவைகளின் மீது கவனக் குவிப்பாக அவை உள்ளமை ஒரு மாற்றாகத்தான் எனக்குப்படுகிறது.
மனவாசி : தந்தை, மகளுக்கிடையிலான பாசத்தை அழுத்தமாய்ப் பதிவு செய்திருக்கிற ‘தங்கமீன்கள்’ தமிழ் சினிமாவின் உச்சம் என்கிற அளவில் நிகழ்ந்து வரும் கொண்டாட்டத்தில் உங்கள் குரலும் கேட்கிறது. நானும் ‘தங்க மீன்கள்’ திரைப்படத்தை தமிழ்த் திரையின் உச்சமாகவே பார்க்கிறேன். ஆனால் ஒரு சிறு வித்தியாசம்... தங்க மீன்கள் தமிழ் மெலோ டிராமாவின் உச்சம் ! காதல் தவிர்த்த மற்ற உறவு நிலைகளை தமிழ் சினிமா இது வரைக்கும் பேசியதே இல்லை என்பதில்லை. நிறையப் பேசியிருக்கிறது. யதார்த்தம் என்பதுதான் மிஸ்ஸிங் இதுவரைக்கும். அந்த வகையறாவில்தான் தங்க மீன்களையும்  என்னால் வைத்துப் பார்க்க முடிகிறது. ஒரு மாற்றாக அல்ல !

முருகன் : 

யதார்த்தம் என்பது பாத்திர வார்ப்புகளில் போதுமான அளவில் இருப்பதாகவே கருதுகிறேன். கல்யாணியின் மனைவி வடிவு, அவனது தாய் தந்தை என்று பல கதாபாத்திரங்கள் யதார்த்தம்தான் !

மனவாசி : 

கல்யாணியின் மனைவி வடிவு, அவனது தாய் தந்தை, முதலாளி, நட்பு,  எவிட்டா மிஸ், ஸ்டெல்லா மிஸ், செல்லம்மா போன்ற பாத்திர வார்ப்புகளில் இருந்த யதார்த்தம் கல்யாணி ( ராமின் ) பாத்திர வடிவமைப்பு பெற்ற மையத் தன்மையால் பலனற்றுப் போயிருக்கிறது. பாலு மகேந்திரா ‘நீங்கள் கேட்டவை’ என்ற பெயரில் தனது கோபத்தைத் திரட்டி தமிழ்த் திரை இரசிகர்களின்மீது தூக்கி எரிந்தது போல ‘’தங்க மீன்கள்’’ தமிழ் சினிமா இரசனையின் மீதான ராமின் கோபமாகவே எனக்குப்படுகிறது. ‘’எமோஸனக்கொற  எமோஸனக்கொற’’ என்பது படம் பார்க்கும்போது உள்ளூரக் கேட்ட கமெண்ட் ! 

ரத்னவேல் : 

செல்லம்மா கல்யாணிக்கு உடல் நலன் சரியாயில்லை என்பதை அறிந்து, பழங்களை எடுத்துக்கொண்டு அவனைப்பார்க்க யாரிடத்தும் சொல்லிக்கொள்ளாது கிளம்பிய செய்தி கேட்டு கல்யாணி கதறி அழும் காட்சி சற்று நாடகார்த்தமானதுதான் என்றாலும் ‘’அப்பா இதுவரைக்கும் உனக்கு ஒன்னுமே செய்ததில்லையேமா, ஸ்கூல் ஃபீஸ் கூட கட்டலியேமா, எனக்கு என்னப் பிடிக்கல’’ என்று அரற்றுவது தனது பொறுப்பற்றத் தனத்தை அவன் உணர்ந்தேதான் இருக்கிறான். ஆனால் அதனை அடுத்தவர் சுட்டிக்காட்டும்போது கோபம் கொள்கிறான். அவன் அப்படித்தான் என்பதாய் இருக்கிறது அந்த பாத்திர வார்ப்பு. அந்தப் பாத்திரம் கூட ஓரளவு இயல்பானதாகத்தான் இருக்கிறது.

மனவாசி : 

அதனை அடுத்து அவன் தீர்மானிப்பது செல்லம்மா கேட்ட வோடா ஃபோன் நாய்க்குட்டியை அவளுக்கு வாங்கிக் கொடுப்பது என்று. தொலைக்காட்சியில் காட்டப்பட்ட நாய்க்குட்டியைப் பார்த்து கேட்டதல்ல அது. பொம்மை நாய்க்குட்டியை விளையாடுவதற்கு தராததிற்கு செல்லம்மா சொன்ன கதையை நிஜமாக்க கல்யாணியின் போராட்டம் என்று அதற்கு அடுத்து ஒரு ஆரம்பம்.  உள்ளபடி எனக்கு வோடா ஃபோன் நாய்க்குட்டிக்கான போராட்டம் வலிந்து திணிக்கப்பட்டதாகவே படுகிறது.   அதனைக் கேள்வி கேட்க, பாசக்கார அப்பா உனக்கு ரோசம் அதிகமே அதிகம்டா !

சதீஸ் : 

நலிந்து வருகிற சிறுதொழில்கள், விளம்பரப் படங்களின் ஆதிக்கம், கல்வி தனியார் மயமாதல்  என்று பல அவசியமான விசயங்கள் பற்றி பேசி இருக்கிறது இந்தப் படம். அந்த வகையில் இந்தப்படம் ஒரு மாற்றுதான் !

மனவாசி : 

இவ்வளவு அரசியல் பேசும் பாத்திரம் பழங்குடிச் சமூகத்தின் அடையாளம் ஒன்று, நம்பிக்கை ஒன்று  விற்பனைக்குப் போக பாசத்தின் அடிப்படையில் அதற்குத் துணைபோகிறது. கல்வி முறை குறித்தான படம்தான் இதுவெனில் அது அப்படியும் இல்லை. சாட்டை, தாரே ஜமீன் பர் என இதற்குமுன் அந்த விஷயங்கள் வெகு அழுத்தமாக சமீபத்தில் பேசப்பட்டுள்ளன. பல விஷயங்களையும் ஒரே படத்தில் பேச முற்படுவது ராமுவுக்குப் புதிதல்லவே ! கற்றது தமிழில் ஒரு கதாபாத்திரமாகவே செயல்படும் நிலவியல் போன்றதல்ல தங்க மீன்களின் பசுங்காடு ! வெற்று அழகியலும் வேலைக்காகாது.

அதேவேளை, வடிவு கல்யாணியிடம் ரயில்வே டிராக் ஓர திண்டில் அமர்ந்து செல்லம்மா மந்தம் என்று சொல்ல, கல்யாணியின் மனக் கொந்தளிப்பை இரயிலின் கடப்போடு இணைத்தது அழகியல்தான் ! ரயிலின் கடப்பு ஒலி போலவே, கப்பல் மற்றும் விமானத்தின் ஒலிகளும் மனச் சூழலோடு பொருந்திப் போவதும் அழகானதுதான். இப்படியான ஆக்கங்கள் அதில் இல்லாமல் இல்லை. ஆனால் அழகியல் மட்டுமே கூட எனக்குப் போதுமானதாயில்லை !

நிவேதிதா : 

மனித உறவுகள் குறித்து பேசுவது அரிதாகிவிட்டிருக்கிற தமிழ்த் திரைச் சூழலில் இப்படியான முயற்சிகளை இவ்வளவு காட்டமாகத்தான் அணுக வேண்டுமா ?

மனவாசி : 

கல்யாணியைத் தவிர்த்த கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றிற்கும் தெரிகிறது ஒரு குழந்தைக்குமுன் என்ன பேசவேண்டும் என்ன பேசக்கூடாது என்று. கல்யாணி உள்ளபடி ஒரு அதி பாசக்கார அப்பாவாக இருக்கிறான். ஆனால் பொறுப்பான அப்பாவாக இல்லை ! அவனது பொறுப்பற்றத்தனம் குழந்தையை திருடச்செய்கிறது. தொலைக்காட்சித் தொடர் அதற்கு தூண்டலாய் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. குளத்தில் இறப்பவர்கள் தங்க மீனாவார்கள் என்கிற கல்யாணியின் கதை செல்லம்மாவைவிட கல்யாணியையே மிகு குழந்தையாக்கிக் காட்டுகிறது. என்னோட கதையைக்கேட்டு அவள் செத்தால் செத்துவிட்டுப்போகட்டும் என்பது குழந்தைமையின் உச்சம் ! இத்தகைய முயற்சிகள் வெகு ஆபத்தானவை என்று சொல்வதில் எனக்குத் தயக்கம் இல்லை.

நிவேதிதா : 

எதிர்மறை விமர்சனம் வைப்பது பிறரது கவனத்தை ஈர்ப்பதற்கானதாகவேபடுகிறது. மாற்று என்பது உடனே நிகழ்ந்து விடுவதல்ல. அதுவொரு தொடர் முயற்சியின் விளைவு. அந்த அடிப்படையில் தங்க மீன்கள் முக்கியத்துவம் உடையதாகத்தான் நான் நினைக்கிறேன்.

மனவாசி : 

மாற்று என்ற பெயரில் வருவனவற்றையெல்லாம் அதற்காய் கொண்டாடித் தீர்க்கவேண்டும் என்பதில்லை. விமர்சனம் வேண்டும். விமர்சனம் என்பதும் மாற்றை நோக்கியதுதான். சற்று கடினமான பார்வையோடு நானிருப்பதாகப்படுவது எனக்குப் புரியாமலில்லை. தங்க மீன்களைக் கொண்டாட எனக்கிருக்கும் காரணம் வேறு. நல்லாசிரியை என்பதை உணர மனம் மாறுகிறான் எவிட்டா மிஸ்ஸின் கணவன். ஒரு காட்சியே போதுமானதாயிருந்தது இராமிற்கு. அழுத்தமான பதிவு அது. தங்க மீன்கள் எனக்கு ஒரு குறும்படமாக இருந்திருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. அந்தவொரு பகுதிக்காகவேணும் உங்களின் கொண்டாட்டங்களில் பங்கெடுத்துக்கொள்வதில் எனக்கு ஒரு சிறு சந்தோஷம்தான். ஆனால் கல்யாணி இரவு நேரத்தில் எவிட்டா மிஸ்ஸை முதல் முறையாய்ப் பார்க்கும்போது அவர்களது தோற்றத்தை வைத்து ஏதோ பிரச்சனை இருக்கிறது என்பதைக் கூட புரிந்துகொள்ளாது தன் மகளோடு அவர்களை பேசச் சொல்வதுதான் கல்யாணியின் பாசத்தின் உச்சம் !

படம் முழுவதும் அரசியல் பேசி, அன்பு பேசி நல்ல தகப்பன் கல்யாணி என்பதை நிறுவத்துடித்து, தலையில் அடித்து அழுது, அடி வாங்கி, வழுக்கி விழுந்து,  காலில் விழுந்து என்று... மன்னிக்கவும்.  ‘’கல்யாணி ரொம்ப நல்லவன்டி. அவன் கொஞ்சம் கெட்டவனாகத்தான் திரும்பி வரட்டுமே’’ கொஞ்சம் கெட்டவனாகிவிடுங்கள் கல்யாணி. ‘’அது என் அண்ணன் வாங்கிக் கொடுத்தது. எனக்கும் கொஞ்சம் கொடு. Deal ? ‘’ கோபத்திற்குப் பின்பு அன்பு இருக்கிறது ! அது கல்யாணியின் கோபத்திற்கு பின்பு மட்டுமேயல்ல ! முடியல. ப்ளீஸ்.... ஆனந்த யாழில் எனக்கான இசையை மீட்டிக்கொண்டு தங்க மீன்களிடமிருந்து சற்றே விடுபட்டு ஆசுவாசம் கொள்ளலாமா ?

முருகன் : 

கொல்லப்போறேன் உன்னை. ஆசுவாசம் என்பது அடுத்த படைப்பு ! ஓநாயும் ஆட்டுக் குட்டியும். ஒவ்வொரு ஃப்ரேமும் கற்றலுக்கானது என்று யாரோ சொல்லியதாகக் கேள்வி.

மனவாசி : 

உள்ளபடி அது உண்மைதான். மாற்று என்கிற குரலோடு வருபவைகளை சற்று கவனத்தோடுதான் அணுகுகிறேன். அந்த வகையில் இந்தப்படம் எடுத்துக்கொண்ட கருவால் என்னை வெகுவாய் பாதித்தது என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன்.

முருகன் : 

இந்த அளவில் இது நல்ல துவக்கம்தான்.

மனவாசி : 

உண்மைதான். ஆனால் இன்னமும் நான் முடிக்கவில்லை. இடைவேளை வரைக்கும் என்னை பெரிதாய் சோதித்த படம் இது. இருந்தும் மிஸ்கின் என்பதால் சற்று பொறுமைகாத்தேன். படம் முடிகிற தருவாயில் மெழுகுவர்த்தியோடு உருகி உருகி ஒரு கதை சொல்கிறார் மிஸ்கின். அதுவரைக்குமான காத்திருப்பு அயர்ச்சியாகி விட்டது. காட்சி ஊடகத்தில் உருக்க உருக்க ஒரு கதை சொல்லல் ! தன் பங்கிற்கு இதில் இளையராஜா வேறு. என்ன ஆயிற்று தமிழ்த்திரைக்கு ? நிர்வாணக்காட்சி, நிலம் பார்த்தபடியே நகர்வுகள், அடிதடிகள், அசையாது நிற்றல் என்று மாற்று பிரமாதம் !

நிவேதிதா : 

அடியாளின் மன உறுத்தலும் அதற்கான அவனது பிராயச்சித்தமும் அனேகமாய் இதுவரைக்கும் பேசப்பட்டிராத ஒன்று என்றே தோணுகிறது.

மனவாசி : 

பிராயச்சித்த வகையறாக்கல் நிறைய உண்டு என்றாலும் இது சற்று மாறுபட்டதுதான்.

முருகன் : 

‘’குத்துப்பாட்டு தவிர்த்து எடுத்து குத்துப்பட்டிருக்கிறார் மிஸ்கின். போஸ்டரும் பசையுமாய் தமிழகம் முழுவதும் அலைகிறார். பாட்டு இல்லாமல் ராஜாவா ? ‘’ என்று பலகுரல்கள் !

மனவாசி : 

பாட்டு மட்டுமே ராஜா அல்லவே !  ரீ-ரிக்கார்டிங்... அதில் ராஜாவல்லவா நம் ராஜா ? என்ன பின்னணி இசை அமைப்பதற்கு பதிலாய் முன்னணி இசையை அமைத்துவிட்டார். ரொம்பவும்தான் துருத்தல் ! கழுவிக் கழுவி ஊத்துகிறார்கள்.

முருகன் : 

இத்தகைய கதைக்கு இசை வெகு அவசியம். இசையற்று இப்படத்தைப் பார்ப்பது என்பது திரை அனுபவமாயிராது.

மனவாசி : 

உண்மைதான். இசை என்பதில் நிசப்தமும் சேர்த்திதான் ! அதனைத் தேடவேண்டி இருக்கிறது. இரவு சுவர்க்கோழிகள் சென்னையில் ஒட்டு மொத்தமாய் மிஸ்கினின் துப்பாக்கியால் அறியாது சுடப்பட்டுவிட்டன போலும். பத்தாதிற்கு ரோஷமானின் இசைக்கோர்வைகள் ராஜாவால் மீட்டெடுக்கப்பட்டது நிச்சயம் மாற்று என்கிற தலைப்பின் கீழ் நாம் கொண்டாடப்பட வேண்டியதுதான்.

ரத்னவேல் : 

இசை மட்டுமல்ல படமே சுடப்படுவதும் அவை பிரபல இதழ்களால் மாற்று என்று கொண்டாடப்படுவதும் சகிக்கவில்லைதான்...

நிவேதிதா : 

பழகிக் கொள்ளவேண்டும் போல் இருக்கிறது. அட்டாக் த கேஸ் ஸ்டேசன் தமிழ்ச் சூழலிற்கு ஏற்ப மூடர் கூடமாகி இருக்கிறது. மூடர் கூடம் என்று யாரைச் சுட்டுகிறார்கள் என்று உள்ளபடி எனக்குப் புரியவில்லை.

சதீஸ் : 

மாற்று ஊடக முயற்சி என்பது  சன்னமாகத் துவங்கி தற்போது வலுப்பெற்று உரத்த தொனியில் ஒலித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் அக்குரலையும் தன்னுள் இழுத்துக்கொண்டு  அதனையே வணிகத்திற்கான விளம்பரச் சொல்லாக அடையாளப்படுத்திக்கொண்டு அப்பட்டமான ஈயடிச்சான் காப்பிப் படைப்புகள் மாற்று ஊடக முயற்சி என்று வெளிவருவது ஒரு தேர்ந்த வணிக உத்திதான் !

ரத்னவேல் : 

இதுதான் மாற்றா.....?? மாற்று என்கிற பெயரில் நிகழும் அபத்தங்களுக்கு மத்தியில் வருத்தப்படாத வாலிபர் சங்கங்கள் சற்று மேல்தான் .

மனவாசி : 

மார்க் போடு ! கொண்டாடு !!

                

                      நன்றி : நிழல் - நவீன சினிமாவிற்கான இதழ்

Tuesday, November 12, 2013

திரையும் இலக்கியமும்




                                                                     - சுரேஷ்வரன் –


1913, மே 3, உயிர்த்த இந்திய சினிமாவுக்கு இவ்வாண்டு 100-வது ஆண்டு ! இன்றைய முழுநீளத் திரைப்படங்களின் முன்னோடிப்படமான ‘ராஜா ஹரிச்சந்திரா’ தாதா சாகேப் பால்கே அவர்களால் தயாரித்து இயக்கப்பட்டு அன்றைய தினத்தின் மாலை 6 – 7.30 மணிக்குத் திரையிடப்பட்டது. அதனை நினைவு கூறுமுகமாய் தமிழக அரசு தென்னிந்திய திரைப்பட வர்த்தகக் கழகத்துடன் இணைந்து இந்திய சினிமாவின் இந்நூறாமாண்டுக் கொண்டாட்டத்தை குத்தாட்டம்போட்டுத் தீர்த்தாகியும்விட்டது. கொண்டாடுவதற்கான கடப்பாடு தென்னிந்திய திரைப்பட வர்த்தகக் கழகத்துக்கு ஈடாக தமிழக அரசிற்கும் நிச்சயம் உண்டு. 5 முதல்வர்களும் இன்னமும் முதல்வர் கனவோடிருக்கும் அனேகரும் திரைத்துறையின் நட்சத்திரங்களல்லவா ?  

சினிமா பெருவாரியான மக்களை எளிதாகச் சென்றடைவதற்கான சரியானதொரு ஊடகம். அதனை அரசியல் கட்சிகள் உட்கிரகித்துக் கொண்டதைப் போலவே, வியாபாரிகளும் உட்கிரகித்துக்கொள்ள, இலாப வேட்டைமட்டுமே சினிமாவின் ஆகச்சிறந்த நோக்காகிவிட்டது பெருந்துயரம்தான் ! உள்ளபடி கலை கலைக்காக, கலை மக்களுக்காக என்றெல்லாம் இங்கொன்றும் இல்லை. கலை காசுக்காக என்பதே திரையின் தாரக மந்திரம் !  

இருந்தும் இப்பெருமக்களுக்கான ஊடகத்தை கலை நேர்த்தியோடும் மக்கள் நல நோக்கோடும் கையாண்ட வெகு சிலராலேயே திரை மற்ற கலைச் செயல்பாடுகளுக்கிடையில் தனக்கான தனித்ததொரு அடையாளத்தை அடைந்திருக்கிறது. இத்திசை வழியிலான முயற்சியை முன்னெடுத்த கலைஞர்கள் உலக அளவில் கணிசமானோர்தான். அக்கணிசத்தில் இந்திய அளவில் எத்தனை பேர், இந்தியாவின் மொழிவாரியான மாநிலங்களலவில் எத்தனை பேர் என்கிறதொரு கேள்வியை எழுப்பிக்கொண்டு உற்று நோக்க, இங்கு பண்டங்களின் குவியல் பெருமலை போல எனில், படைப்புக்களின் குவியலோ ஒரு சிறு குன்றளவிற்குக்கூட இல்லை ! பெருத்த அயர்ச்சிதான் ! அதுவும் குறிப்பாக வங்காள, மராட்டிய, கேரளத்து பங்களிப்புகளோடு ஒப்பிட, தமிழகத்தின் பங்களிப்பு போதிய அளவில்கூட இல்லை என்பதே நிதர்சனம். நல்லவேளையாக மாற்றுத்திரை நோக்கிய குரல்கள் தமிழ்ச் சூழலில் சற்று உரக்க தற்போது ஒலிக்கத்துவங்க, அதுகொண்டு சில படைப்பாக்க முயற்சிகள் நடந்தேறுவது நம்பிக்கைகொள்ள வைக்கிறது. 

இந்திய அளவில் மத்திய மாநில அரசுகளின் நூறாமாண்டுக் கொண்டாட்டங்களில் வசூலை வாரிக்குவிக்கும் படங்கள் நல்ல படங்கள் என்கிற கண்ணோட்டத்திலிருந்து மாறுபட்ட, ‘ஒரு கலைப்படைப்பின் ஆகச்சிறந்த பணி என்பது ஆத்ம சுத்திகரிப்பே’ என்கிற வகையில் உன்னதமான படைப்பாக்க முயற்சிகளை மேற்கொண்ட முன்னோடிகளையும் அவர்கள்தம் படைப்புக்களையும் நாம் கவனப்படுத்தி இருக்கவேண்டும். அத்தோடு, அவர்கள்தம் திசைவழியில் நம்பிக்கையோடு பயணிக்க போதிய அங்கீகாரத்தையும் ஊக்கத்தையும் இன்றைய திரைக்கலைஞர்களுக்கு அரசு தம்மளவில் அளித்திருக்கவும் வேண்டும். அது நிகழவில்லை. அவ்வாறு நிகழ்வதற்கான அழுத்தம் கலை இலக்கியத் தளங்களிலிருந்து எழுந்திருக்க வேண்டும். அதுவும் எழவில்லை. துரதிருஷ்டம்தான் ! நமக்கு விமர்சனம் என்கிற பெயரில் நல்ல முயற்சிகளை காயடிக்க மட்டும்தான்  தெரியுமோ என்று சுயகேள்வியொன்றை கலை இலக்கியக் கலகக்காரர்கள் தமக்குள் எழுப்பிக்கொண்டாகவேண்டிய காலகட்டம் இது ! 

இப்படியான நடப்புப் பின்னணியில் மத்திய அரசின் சாகித்திய அகாதெமி தனது இலக்கியத் தளத்திலிருந்து திரையின் மீதும் தனது கவனத்தைத் திருப்பி இருப்பது, அதுவும் தமிழ்ச் சூழலில், மிகுந்த காலதாமதத்திற்குப் பிறகானதுதான் எனினும் பெரிதும் வரவேற்பிற்குரியது  ! கடந்த செப்டம்பர் மாதம் 20 மற்றும் 21 திகதிகளில் ‘தமிழ்த் திரைப்படத்தில் இலக்கியத்தின் தாக்கம்‘ என்கிற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கை சாகித்திய அகாதெமி நிகழ்த்தியது. இலக்கியத்திற்கும் திரைக்குமான இணக்கத்தையும் பிணக்கத்தையும் கவனப்படுத்தி, இரண்டிற்குமிடையே ஒரு உரையாடலை அது முன்னெடுத்திருக்கிறது. குத்தாட்டக் கோலாகலத்திற்கிடையே அக்கருத்தரங்கு சற்று ஆசுவாசப்படுத்தக் கூடியதாய் இருக்கிறது.  
  
இலக்கியமும் திரையும் அதனதன் அளவில் தனித்துவமானவை. எழுத்து மொழியும் காட்சி மொழியும் இருவேறு அடிப்படைகளில் இயங்குபவை.  எனினும் வாழ்வின் யதார்த்தம் என்பது இரண்டிற்கும் ஒன்றுதான். யதார்த்தத்தின் ஆழ அகலங்களில் பெருமீனென நீந்தும் எழுத்து கண்டு சொன்னவை இலக்கிய உச்சங்கள் ! எண்ணிக்கையில் அது கூடத்தான். காட்சியோ ஆகாயத்தில் மினுங்கும் நட்சத்திரங்களை மீன்களென எண்ணித் தூண்டில் போடும் கற்பனையில் தன்னை ஆழ்த்திக்கொள்ள, திரை கனவுத் தொழிற்சாலையாகி விட்டிருக்கிறது. யதார்த்தத்தில் காலூன்றிய திரை ஆக்கங்கள் குறைவுதான். இந்தளவில் இலக்கியம் திரைக்கு எந்தளவில் தனது பங்களிப்பை நிகழ்த்த முடியுமெனில் கதை என்கிற கூறுதான் முதலில் கவனத்திற்கு வருகிறது.

இலக்கியத்தையும்   திரையையும் இணைக்கும் பாலம் என்பது திரைக்கதை ! கதையைச் சொல்லுவது இலக்கியம், அதுவே காட்டுவது திரை என்றாகிறது. எழுத்துப் பதிவைக் காட்சிப் பதிவாக்கும்போது திரைக்கலைஞன் எதிர்கொள்ள நேரும் சவால்கள் பல. இலக்கியம் என்பது எழுத்தறிவு பெற்ற மக்கள் சமூகத்திற்கானது. திரை அனுபவம் என்பது அனைவருக்குமானது. இலக்கியப் பிரதியை தேவையெனில் நிறுத்தி நிதானமாய் வாசித்துக்கொள்ள முடியும். திரை அனுபவம் என்பதோ காட்சிகளின் தொடர் ஓட்டத்தால் மட்டுமே சாத்தியப்படக்கூடியது. குறிப்பிட்ட காலவரையறைக்குள் அந்த அனுபவத்தை பார்வையளனுக்குள் கடத்தியாக வேண்டியிருக்கறது. அதற்காய் அவனது கவனத்தை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள முனைகிறது திரை. காட்சிப்பூர்வமாய்க் கதையைச் சொல்வதில் அது பல்வேறு உத்திகளைக் கையால்கிறது. தனித்தனியான சொற்களை குறிப்பிட்ட வரிசையில் வைக்க அது முழுமையானதொரு அர்த்தத்தைத் தருவதுபோல, செறிவான காட்சித் துண்டுகளை இணைத்து அர்த்தத்தை, உணர்வை, அனுபவத்தைக் கட்டியெழுப்ப முனைகிறது அது. திரைமொழி செறிவுறுகிறது !  

கதை என்பது பொதுவாக சம்வங்களின் கோர்வை ! ஒரு சிறுகதையை முழுநீளத் திரைப்படமாக்குவதற்கு சம்பவங்களை சேர்க்க வேண்டியிருக்கிறது. அதேபோல் ஒரு நாவலைத் திரைப்பதிவாக்க சம்பவக் குறைப்பும் சேர்ப்பும் நிகழ்வதற்கான சாத்தியப்பாடு அதிகம்தான். சமயங்களில் கதையின் கதாபாத்திரங்களும் குறைப்புக்கும் புதிதான சேர்ப்புக்கும் ஆளாவதுண்டு ! ஒரு எழுத்துப் படைப்பு இயக்குநர் வழி மறு ஆக்கத்திற்கு உள்ளாகும்போது இத்தகைய மாற்றங்கள் தவிர்க்க முடியாததாகிறது. ஆயிரம் சொற்களால் விவரித்துச் சொல்லப்பட்ட ஒரு தெருமுனையை, ஒரு காட்சித்துண்டு அழுத்தமாய் ஒரு சில வினாடிகளில் நம்முன் நிறுத்திவிடும். இது திரையின் ஆகப்பெரும் சாத்தியம் எனில், சொற்களுக்கு மட்டுமே சிக்கும் கதாபாத்திரத்தின் உள்ளார்ந்த மனவோட்டங்களை காட்சிப்படுத்துவது என்பது திரைக்கு உள்ளபடி ஒரு சவால்தான். ஆக, இத்தகைய சவால்களை எதிர்கொள்கிற விதத்தில் திரை தனக்கான மொழியை கூர்மைப்படுத்திக் கொள்கிறது என்கிறபோது இலக்கியம் திரைமொழியை மேம்படுத்த உதவுகிறது என்றுதான் சொல்லவேண்டும். 

திரையின் காட்சிப்பூர்வமான கதை சொல்லலை, அதன் சாத்தியங்களை உள்ளபடி உள்வாங்கிக் கொண்ட ஒரு எழுத்தாளன் திரைக்கான பிரதியை, திரைக்கதையை, எழுத முடியும். திரைக்கதைப் பிரதியாக்கம் அவனது எழுத்தாற்றலுக்கு விடுக்கும் சவால்களை அவன் எதிர்கொள்ளும் விதத்தில் அவனது எழுத்தாற்றலும் மேம்படவே செய்கிறது. இலக்கியத்தில் கதை, கவிதை, கட்டுரை என்கிற வடிவங்களை உட்கிரகித்துக்கொண்டது போலவே, திரைக்கதை வடிவத்தையும் அவனால் கிரகித்துக்கொள்ள முடியும்தான். தேவை விருப்புணருவுடன் கூடிய முயற்சி ! 

எழுத்தாளர்களுக்கு திரைக்கதை எழுத்துப் பயிற்சி போலவே, திரைக்கலைஞர்களுக்கு வாசிப்பின் வாயிலாக, கதையின் சூழலை, கதாபாத்திரங்களை உட்கிரகித்து கொள்ளுதலின் வாயிலாக,  யதார்த்தத்தையும்,  கற்பனாத்திறனையும் தன்னுள் விரித்துக் கொள்வதற்கான பயிற்சியும் கிடைக்கிறது. தனது நேரடி அனுபவத்திற்கு உட்படாத சூழல் சார்ந்த மனிதர்களின் வாழ்வையும் வாசித்தலின் வாயிலாக அவன் தன் அனுபவமாக்கிக்கொள்ள முடியும். 

பாத்திரத்திற்கேற்ற நடிகனை இயக்குநர் தேர்வு செய்கிறார் என்றாலும் கதாபாத்திரங்களை தன் உடல் மொழியால் உயிர்ப்பிக்கும் ஒரு நடிகன் இலக்கிய அல்லது திரைப்பிரதியை எவ்வாறு உள்வாங்கிக் கொள்கிறான் என்பதும் கவனப்படுத்தலுக்கு ஆட்படுத்தப்பட வேண்டியுள்ளது. சமயங்களில் பிரதியின் தன்மை நடிப்புப் பாங்கைத் தீர்மானித்து விடும். இலக்கிய வழக்கு மிகை  நடிப்பு முறையை நிர்ப்பந்தித்துவிடக்கூடும். ஆக, இலக்கியம் திரையை, திரை நடிப்பை தாக்கத்திற்குள்ளாக்குகிறது என்பதும் கூட உண்மைதான் ! 

உள்ளபடி திரைக்கும் இலக்கியத்திற்குமான உரையாடலைப் போலவே, வாய்மொழி மரபிற்கும் இவைகளுக்கும், நாடகத்திற்கும் இவைகளுக்கும் என்பது போல பல்வேறு தளங்களும் கவனத்திற்குட்படுத்த வேண்டியுள்ளது. சாகித்திய அகாதெமியின் கருத்தரங்கில் பங்கேற்ற எழுத்தாளர்கள் ( நீல பத்மநாபன், பொன்னீலன், எஸ். ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன், ஜி. திலகவதி )  , நாடக இலக்கியப் பிரதியாளர்கள் ( ந. முத்துசாமி, இந்திரா பார்த்தசாரதி, மு. இராமசாமி ) , திரைக் கலைஞர்கள் ( பாலு மகேந்திரா, பாக்கியராஜ், ரா.சி.சக்தி, ஞான ராஜசேகரன், சசி, கௌதமன், லெனின், அம்ஷன் குமார், தியோடர் பாஸ்கரன், சிவக்குமார், அபிஷேக் )  அவரவர் அனுபவங்களிலிருந்து பெற்ற கருத்துக்களை முன்வைத்த பாங்கும், நிகழ்வை ஒருங்கிணைத்தோரின் ( மாலன், கே. ஸ்ரீநிவாசராவ், கிருஷ்ணசாமி நாச்சிமுத்து, இரா. காமராசு, அ.சு. இளங்கோவன், சம்பத் )  நேரிய உழைப்பும் வணக்கத்திற்குரியது. இது போன்ற கருத்தரங்கங்கள் கல்லூரி அளவில், திரைப்பட இயக்கங்களால் அந்தந்தப் பகுதிகளில், அரசு மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தகக் கழகங்களால் மாவட்டம் தோறும் இவ்வாண்டு முழுவதும் நிகழ்த்தப்பட வேண்டும். தமிழ்ச் சமூகத்தின் மீது ஆகப்பெரும் தாக்கத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கும் திரை குறித்த விழிப்புணர்வை அனைத்து தரப்பு மக்களுக்கும் அது கொண்டுசெல்ல ஏதுவாயிருக்கும். செய்வோமா ..? செய்வோம் ! வாருங்கள் ! ஒரு துளியாய்க் கலந்து அலையாய் எழுவோம் !!

( ‘தமிழ்த் திரைப்படத்தில் இலக்கியத்தின் தாக்கம்‘ என்கிற தலைப்பில் சாகித்திய அகாதெமி நிகழ்த்திய இரண்டு நாள் கருத்தரங்கில் அரங்கேறிய கருத்துக்களையும் அவை என்னுள் கிளர்த்திய அனுபவங்களையும் தொகுத்துக்கொண்டதின் சிறு பதிவு இது ! ).

நன்றி : நிழல் 
 
                                  

Friday, November 1, 2013

பேசும் படம்






சினிமாவிற்கான தோற்றுவாய் காட்சிகளைப் பதிவு செய்யும் புகைப்படக்கலையே ! ஆக, புகைப்படக்கலையின் பிறப்பு குறித்து முதலில் பார்ப்போம். ஒரு இருண்ட அறைக்குள் சாவித்துவாரம் வழியே ஊடுறுவிய ஒளிக்கற்றையோடு சேர்ந்து வெளியே இருக்கும் காட்சியானது தலைகீழாகவும் மங்கலாகவும் சுவற்றில் படிவது காண கருக்கொண்டது புகைப்படக்கலை ! அவ்வாறு சுவற்றில் படியும் காட்சி பிம்பத்தை தெளிவான பதிவாக எடுத்துவைப்பது எப்படி என்கிற ஆராய்ச்சி முன்னெடுக்கப்பட்டு, லென்ஸ் மற்றும் புகைப்படச் சுருள் என்கிறவரை படிப்படியாகக் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன. புகைப்படக் கருவி கையடக்கமாகியது ! புகைப்படக்கலை உருக்கொண்டது !

கினிமா என்ற கிரேக்கச் சொல்லே ஆங்கிலத்தில் சினிமா என்றானது. அசைவது, நகர்வது என்று அதற்குப் பொருள்.  பீட்டர் மார்க் ரோஜெட் என்ற விஞ்ஞானி 1824-ல் வெளியிட்ட , "கண்களில் உள்ள விழித்திரையானது தன் மீது விழும் காட்சிப் பிம்பத்தை, உண்மை நேரத்தை விட 1/16 நொடி அதிகமாகத் தக்க வைத்துக் கொள்கிறது. அந்த நேரத்துக்குள் விழித்திரையில் விழும் மற்றொரு பிம்பம் அசையும் தன்மையைப் பெறுகிறது."  என்கிற ‘பார்வை நிலைப்புத் தன்மைக் கொள்கை’யே சினிமா-வின் வளர்ச்சிக்கு அடிப்படை ! ஒரு வினாடிக்கு 16 படங்கள்  என்கிற வீதத்தில் அடுத்து அடுத்து வைக்க அசையும் படம் உருவானது.  பயாஸ்கோப், மாஜிக் லேண்டர்ன், கைனடாஸ்கோப், வைடாஸ்கோப்பு, ப்ரொஜெக்டர் வழி பிம்பங்கள் அசையும் பிம்பங்களாயின. ஒரு நிமிட துண்டு படங்கள் பல எடுக்கப்பட்டன. ரயில் வண்டி ஸ்டேஷனை நோக்கி வருவது போன்ற காட்சி திரையிடப்பட்டபோது, மக்கள் இரயில் தங்கள் மீது மோதவருவதாக எண்ணி பயந்து ஓடினர். நொடிக்கு 16 பிம்பங்கள் என்கிற வீதத்தில் இருந்தபோது பாத்திரங்களின் செயல்கள் இயல்பு மீறியதாக இருந்தது. படிப்படியாக அண்மைக் காட்சி, தூரக்காட்சி,  காட்சிக் கோணம், படத்தொகுப்பு என்று சினிமாவின் நுட்பம் கூடியது. காட்சி மொழி வித்து கொண்டது. 

காட்சிகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டு மவ்னப் படங்களாக சினிமா காட்டப்பட்டுக்கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில் நாடகம் தனக்கான இடத்தைத் தக்கவைத்துக்கொண்டுதான் இருந்தது. பிற்பாடு சினிமா பேசத் துவங்க நிலைமை தலைகீழாகியது. வினாடிக்கு 24 பிம்பங்களென கதாபாத்திரங்களின் செயல்கள் இயல்புத் தன்மை பெற, கறுப்பு வெள்ளையிலிருந்து வண்ணப்படமாக சினிமா வடிவெடுக்க அசுர வேகத்தில் வளர்ச்சி கண்டது சினிமா ! திரைமொழி வேர்பிடித்து விருட்சமாய்க் கிளைத்துத் தளைத்தது !

லூமியர் சகோதரர்கள் என்றழைக்கப்பட்ட  அகஸ்டி மற்றும் லூயிஸ் லூமியர் இருவரும் முதல் நகரும் படம் எடுத்தனர். வெளியான ஆண்டு 1895. 17 அடி நீளமான பிலிம்மில் இவர்களது படம் ஓடும் நேரம் 50 வினாடிகள் ! தொழிற்சாலையிலிருந்து தொழிலாளர்கள் வெளியே வருவதை படம்பிடித்துக் காட்டினார்கள். உலகின் முதல் வீடியோ கேமராவை கண்டுபிடித்தவர்களும் இவர்களே. ஆண்டு அதே 1895 ! இவர்கள் கண்டுபிடித்த சினிமட்டோகிராப் என்னும் கேமராவைக் கொண்டே இவர்களது முதல் படத்தை எடுத்துள்ளனர். அந்தப் படத்தின் பெயர், La Sortie des usines Lumière à Lyon அல்லது ஆங்கிலத்தில் ‘Workers Leaving The Lumiere Factory !

லூமியர் சகோதரர்கள் படம் எடுக்க ஆரம்பித்தபோதே அவற்றை இங்கு நமது மும்பையிலும் திரையிட்டுக் காட்ட ஆரம்பித்திருந்தனர். ஆக, இந்தியாவில் திரைப்படம் அறிமுகமாகியது 1895 ஆண்டில் ! இந்தியாவின் முதலாவது மெளனப்படத்தை எடுத்தவர் தாதா சாகிப் பால்கே. படம் ராஜா ஹரிச்சந்திரா ! வெளியான ஆண்டு 1913. அதனால்தான் நடப்பு ஆண்டை ( 2013 ) இந்திய சினிமாவின் நூற்றாண்டாக நாம் கொண்டாடி வருகிறோம். இந்தியாவின் முதல் படத்தயாரிப்பாளர், தியேட்டர் ஓனர் ஜாம்ஷெட்ஜி பிரேம்ஜி மதன். இந்தியாவின் முதல் பேசும் படம் வெளியான ஆண்டு 1931. படம் ஆலம் ஆரா ! இயக்கியவர் அர்தேஷிர் இரானி. இதே ஆண்டு தமிழகத்திற்கும் பேசும் படம் வந்துவிட்ட்து குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் முதல் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் திரு. R. நடராஜ முதலியார். இவரது முதல் படம் “கீசக வதம்”, ஆண்டு 1916. தென்னிந்தியாவின் முதல் மெளனப் படம் இதுதான். முதல் பேசும் படம் தமிழகத்திற்கு வந்த ஆண்டு முன்னரே கூறியதுபோல 1931. படம் காளிதாஸ் ! இயக்கியவர் H.M.ரெட்டி. அப்படத்தின் கதாபாத்திரங்கள் பல மொழிகளில் பேசின. முழுக்கவும் தமிழ் பேசிய படம்/ பாடிய படம் 1933 -ஆம் ஆண்டு வெளியான கலவா ! அர்ஜுனனின் பெருமையைச் சொன்ன இந்தப் படத்தை இயக்கியவர், P.P.ரங்காச்சாரி. 1936 -ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல் பெண் இயக்குனரான T.P.ராஜலக்ஷ்மியின் மிஸ்.கமலா வெளியானது.

தமிழ் சினிமாவின் துவக்கத்தில் மக்கள் மத்தியில் பிரபலமாயிருந்த புராண, இதிகாச, சமூகக் கதைகளே அதிகம் எடுக்கப்பட்டன. அத்தோடு சுதந்திரப் போராட்டத்தை முன்வைத்த படங்களும் வெளிவந்தன. கதைகளை நாடகச் சூழலிருந்து உட்கிரகித்துக்கொண்டது போலவே, நடிகர்களாக மக்கள் மத்தியில் பிரபலமாயிருந்த நாடக நடிகர்களையே தமிழ் சினிமா அப்போது உட்கொண்டிருந்தது. கூத்து, நாடகப் பாணியிலேயே பாடல்கள் பெரிதும் இடம்பெற்றிருந்தன. நாயகர்களின் பெயரோடு “பாகவதர்”  இணைந்து இருப்பது வியாபார உத்தியாகயிருந்தது.

பாடல் விடுத்து, வசனத்தில் தமிழ் சினிமா கவனம் காட்டத் தொடங்கியது 1945 – 1950களில் தான். வசன காலகட்டத்தில் திராவிட மற்றும் பொதுவுடைமைக் கருத்துக்கள் பற்றி பேசும் படங்கள் நிறைய வெளிவந்தன.  பாடலின் இடத்தை வசனம் பிடித்துக்கொண்டது. பக்கம் பக்கமாக வசனங்கள் பேசப்பட்டன. அண்ணாதுரை, கலைஞர் கருணாநிதி போன்றோர் தமது அரசியல் பிரச்சாரத்திற்கான கருவியாக தமிழ் சினிமாவைக் கைக்கொண்டனர். உலக அரங்கில் சினிமாவின் காட்சி மொழியின் நுட்பம் கூடிக்கொண்டிருந்த வேளையில், தமிழ்ச் சூழலில் தமிழ் சினிமா நாடகார்த்தமாகவே வீறுநடை போட்டது. யதார்த்தம் என்பதைவிட மிகைத்தன்மையை சகல கலை இலக்கியத் தளங்களிலும் மரபாகக் கொண்டிருந்த தமிழ்ச் சமூகம் சினிமாவை மரபின் தொடர்ச்சியில் வைத்தே கண்டு களித்துக் கொண்டாடிவந்துள்ளமை உற்று நோக்கத்தக்கது ! நாடகக் கொட்டகைகளும் அரிசி ஆலைகளும் திரை அரங்குகளாக மக்கள் பார்த்தது திரைநாடகங்களாக இருந்தது உள்ளபடி புரிதலுக்குரியதுதான் !

-சுரேஷ்வரன்-
( கூத்துப்பட்டறை )

நன்றி : மலைகள்.காம்

Wednesday, October 30, 2013

மட்டும்


          




















உன்னின் மவ்னத்திற்கான அர்த்தத்தைத் தேடிப்போய்
என்னின் ஆழத்தில் கிடந்த அந்த யாழினை
கண்டுகொண்டிருக்கிறேன் ஊர்ஸுலா.
நரம்புகள் ஏதுமற்ற அக்கருவியிலிருந்து
காட்டுப்பூவின் கந்தம்போல் சித்தம் மயக்கும் இசையொன்று
ஊறிப்பெருகியபடியே இருக்கிறது.
யாரும் தீண்டியிரா என்தனிமைக்குள் நிரம்புமதில்
பெருமீனென நீந்தித் திளைக்கிறேன்.
யாழின் புதிர்த்தன்மை குறித்து
மேலும் பகிரும் துணிவற்றிருக்கிறேன்...
ஆயினும் ஊர்ஸுலா,
உன்னிடம் சொல்லித்தானாகவேண்டும் :
நீயற்ற கணங்களில்
வெட்டியெறியப்பட்ட ஒரு மரத்துண்டம்போல
மூச்சற்றுக் கிடக்கிறதது.