Friday, December 11, 2009
Wednesday, December 9, 2009
களிப்பும் கற்பிதமும்
சுரேஷ்வரன்
(கூத்துப்பட்டறை )
(கூத்துப்பட்டறை )

நடிப்பு என்பது நடிகனின் மொழி. ஓவியம், சிற்பம், நடனம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போல நடிப்பு என்பதும் ஒரு மொழி. மொழி என்பது எண்ணங்களையும் உணர்வுகளையும் பிறரோடு பகிர்ந்து கொள்வதையே பிரதான நோக்கமாகக் கொண்டிருப்பது. நடிப்பு அவ்வாறு பகிர்வதோடு அல்லாமல் ஆழ்ந்த அனுபவத்திற்குப் பிறரை ஆட்படுத்துவது என்பதையும் நோக்கமாகக் கொண்டிருப்பது.
மொழி என்று வருகிறபோது அதன் தோற்றம் குறித்த கேள்வி நம்முள் எழுவது இயல்பு. இந்தக் காலப்பெருவெளியில் எந்த அளவிற்கு முந்தியது என்று சொல்கிறோமோ அந்த அளவிற்கு ஒன்றிற்குப் பெருமைதான். ஆனால் வெறுமனே பெருமையடித்துக் கொள்வதற்காய் சொல்லப்படுபவைகளாக அவைகளை நாம் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. எந்த அளவிற்கு ஒன்று தொன்மையானது என்று சொல்லப்படுகிறதோ அந்த அளவிற்கு அதன் முக்கியத்துவம் கூடும். போதிய கவனமும் பொறுப்புணர்வும் இன்றி அதனைக் கையால்வது அதனால் தவிர்க்கப்படலாம் என்ற அக்கறை அதற்குப் பின்னால் இருக்கலாம். எது எப்படியோ நமக்கு நமது நடிகனின் மொழியின்மீது அக்கறை இருக்கிறது. அந்த அக்கறையின் அடிப்படையில் மட்டுமல்ல, அறிவுக்குப் பொருத்தமான காரண காரியத்தின் அடிப்படையில் நின்றும் சொல்கிறோம்... நடிப்பு ஓர் ஆதிகலை! மூத்தகுடி பேசிய முதல்மொழி நமது நடிகனின் மொழி. உடல்மொழி!
உணவுக்காய் பிற உயிரினங்களை வேட்டையாட வேண்டியவனாய் இருந்தான் காட்டுமனிதன். அதே காரணம் பற்றி அவன் பிற உயிரினங்களால் வேட்டையாடவும் பட்டான். பசியும் அச்சமும் உள்ளிருந்து கிளர்த்த மனிதனும் விலங்கும் மூர்க்கமுடன் எதிர்கொண்ட தருணங்களில் காடு அதிர்ந்தது. வேட்டை நிகழ்வில் உயிர்மீளும் கணம் ஒவ்வொன்றும் பெருமகிழ்ச்சி கொடுக்க, அதைப் பிறரோடு பகிரவும் கொண்டாடவும் துடித்தானவன். கொடுவிலங்கை தான் வீழ்த்திய கதையை மொழியறியா அம்மனிதன் தன் உடலையே மொழியாக்கிக் கதைக்க, அவன்தன் மனைவியும் மக்களும் நட்பும் சுற்றமும் தம் விழிகளையே செவிகளாக்கி உற்றுக்கேட்டனர் அதை. தான் கொன்ற மிருகத்தைத் தன் கற்பனையால் உயிர்ப்பித்து, அதனோடான தனது போராட்டத்தை அவன் நிகழ்த்திக் காட்டிய அக் கணத்தில் முளை விட்ட கலைதான் நடிப்புக்கலை.
உணவுமுறையும் வாழிடமும் மனிதனுக்குள் நுட்பமான சலனங்களை நிகழ்த்தவல்லவை. தன்னால் வெல்லமுடியாத ஆற்றல்களை வணங்கத் தலைப்பட்டவன் சடங்குகளைக் கண்டடைந்தான். பேரச்சத்திலிருந்தும் பெரும்பசியிலிருந்தும் பெருகி வந்த அவனின் விநோத நம்பிக்கைகளை உண்டு பெருத்தது சடங்கு. உணவுக்கென வேட்டையாடப்பட்ட விலங்குகளின் தோல்கள் ஆடைகளாயின. எலும்புகள் ஆயுதங்களாயின. விலங்குகளின் அசைவுகள் அடவுகளாயின. வேட்டை ஆட்டமானது. ஆட்டம் சடங்கின் அங்கமானது. வேட்டைக்கு முன்பும் வேட்டைக்குப் பின்பும் சடங்காடினான். சடங்கின் ஆட்டம் அவனுக்கு வேட்டைக்கான மனோபாவத்தையும் வேட்டையாடுதலின் நுட்பங்களையும் அவனளவில் பேராற்றல்களின் காப்பையும் அவனுக்கு ஒரு சேர அளித்தது. தாம் ஆடிய வேட்டையோடு மூத்தோர் ஆடிய மாபெரும் வேட்டையையும் அடுத்த தலைமுறை எண்ணிப் பெருமிதம் கொள்ளும் பொருட்டும் அதன்வழி வேட்டையின் நுட்பங்களை அது கற்றுக்கொள்ளும் பொருட்டும் ஆடிக்காட்டினான். தன்னை வெளிப்படுத்துவது என்பதிலிருந்து பிறிதொன்றையும் பிரதிபலித்திக்காட்ட ஆதிமனிதன் முனைந்த அந்தக் கணம் மிகவும் முக்கியமானது. கதாபாத்திர ஏற்பு என்பதின் துவக்க வடிவம் கருக்கொண்டது அக்கணத்தில்தான்.
ஒரு கலைச்செயல்பாடு என்கிற வகையில் ‘நயனில சொல்லினும் சொல்லுக, பயனில சொல்லாமை நன்று’ என்கிறது தமிழ் மரபு. மக்களுக்குப் பயன்படாத எதுவொன்றையும் நிராகரிக்கிற மரபு நம்மரபு. அவ்வகையில் நடிப்புக்கலை பகிர்தலில் பொழுபோக்கின் அம்சங்களோடு, அடுத்த தலைமுறைக்கு வேட்டையின் நுட்பங்களைக் கற்றுக்கொடுக்கும் காரியத்தைச் செய்யக்கூடிய ஒன்றாகவும் இருந்துள்ளது கவனிக்கத்தக்கது. வேட்டைச் சமூகத்தில் வேர்பிடித்து, கிளைபரப்பி, காடுகடந்தும் பரந்திருக்கிற நடிப்புக்கலை, கற்காலம் தொட்டு இக்காலம் வரைக்கும் அடைந்திருக்கிற மாற்றங்களும் கண்டடைந்திருக்கிற நுட்பங்களும்தான் எத்தனை எத்தனை !
.......................................................................................................................................................
2
முன்னரே கண்டதுபோல பண்டு காலத்திலேயே வேர்கொண்ட நமது நடிப்புக்கலை, அதன் முளைப்பருவத்தில் தற்போது நாம் காணும் வடிவில் செறிவு பெற்றிருக்கவில்லை. காட்டு மனிதனிலிருந்து உடல்வழி வழிந்த அது காட்டாற்றின் மூர்க்கத்தோடு இருந்தது. அவனது அசைவுகளில் காட்டு மிருகங்கள் தென்பட்டன. மிருகங்களின் உறுமலும் பிளிறலும் கதறலும் சீற்றமும் அவன் குரலேறி வந்தன. வேட்டையாடப்பட்ட விலங்குகளின் தோல்களையும் நரம்புகளையும் எலும்புகளையும் கொண்டு இசைக்கருவிகளையும் உருவாக்கிக் கொண்டான். ஆட்டத்தின் அசைவுகளோடும் குரலோடும் இசையையும் இணைவுக்கொள்ளச்செய்து கலைஞனாகிப் போயிருந்தான் காட்டுமனிதன்.
மழைபொய்த்து காடு கருகிய ஒரு காலத்தில், நீர் தேடியும் உணவு தேடியும் காட்டாற்றின் வறண்ட சுவடு பற்றித் தொடர்ந்தவன் நிலம் தொட்டான். தேங்கிக் கிடந்த நீரருகே தங்கிப்போனான். விதைக்குள் உறங்கும் காட்டைக் கண்டுகொண்டவன் நிலம் கீறத் துவங்க, அவன் மனசு நிலத்தோடு சேர்ந்து பண்பட்டது. உணவுக்காய் உழுது பயிர்செய்யத் துவங்கினான். வாழிடமும் உணவுமுறையும் புத்துலகம் ஒன்றை அவனுள் திறக்க, காட்டாறு நிலம் தொட்டு சற்று நிதானம் கொண்டது. நடிப்புக்கலை அதன் அடுத்தகட்டமும் கண்டது.
பயிர் வாசனையை அவன் முகரும் போது அவனுள் ஏதோ ஒன்று இரத்த வீச்சத்திற்காய்த் தவித்தது. புதிய மதிப்பீடுகளினாலான வாழ்க்கை முறை சடங்குகளிலேயே அதற்கான தீர்வையும் வகுத்தது. வேட்டைக்கான வடிகால்களாய் பலி கொடுத்தல், ஏறுதழுவல், வீரவிளையாட்டுகள், கூத்து எனக் கண்டது. அனைத்தும் சடங்குகளை மையம் கொண்டன. சடங்குகள் வழிபாட்டிடத்தை மையமாகக் கொண்டிருந்தன. சகலகலைகளும் சங்கமிக்குமிடமாக வழிபடும் இடம் இங்கு ஆனது.
வேட்டையாடி விலங்கினை வீழ்த்தியதைக் கொண்டாட்டமான மனநிலையோடு நடித்துக்காட்டியதைப் போலவே பயிர்கள் நன்கு செழித்து வளர்வதையும் இளங்காற்றில் அவை அசைவதையும் தன்மொழியில் சொல்லத்தலைப்பட்டான் அவன். புதிய மதிப்பீடுகளை நிலைநிறுத்திக் கொள்வதற்காகவும் சுயசந்தோஷத்திற்காகவும் தன் கற்பனையைக் கொண்டு கதைகளைப் புனைந்தான். வெல்ல இயலாத சக்திகளையெல்லாம் கதாபாத்திரங்களாக்கினான். அசாத்தியமான கற்பனையாற்றலின் வழி படைப்பாற்றலின் ருசியினை அறிந்தான். அனைத்து கலைகளிலும் இலக்கியங்களிலும் நுட்பம் கூடின. நடிப்புக்கலை அடுத்தடுத்து நுட்பங்களை அடைந்துகொண்டே இருந்தது. .
3
நமது மரபுக் கலைஞன் கலைவெளியிலான தன் பயணத்தை நம்பிக்கையின் மீதேறி மேற்கொள்கிறான். காலவோட்டத்தில் இயற்கை வழிபாடு, முன்னோர் வழிபாடு, நடுகல் வழிபாடு, சிறுதெய்வ வழிபாடு என்பவைபோல் பெருந்தெய்வ வழிபாட்டை அவன் வந்தடைய, கணக்கிலடங்கா கதைகள் உருக்கொண்டன. நடிக்கப்பட்டன. அவை மக்களின் மனதில் அந்நம்பிக்கைகளையும் வாழ்க்கைக்கான புதிய மதிப்பீடுகளையும் ஏற்றின. சடங்குகளின் ஒரு பகுதியாக கதைகள் காட்சி கொண்டன.
கூத்து தமிழ் மரபுக் கலை வடிவம். பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், சேலம், தர்மபுரி, திருவள்ளூர், செய்யாறு, தஞ்சை, புதுவை போன்ற பகுதிகளில் இன்றும் இருந்து வருகிறது. மக்களின் நம்பிக்கைகளோடு இரண்டரக் கலந்திருக்கிற கூத்து ஊர்ப் பொது இடத்தில் திறந்த வெளியில் நிகழ்த்தப்படுகிறது. என்றாலும், நடிப்பு மேடையைத் தாண்டி கிராமத்துத் தெருக்களிலும் ( பீமன் பகாசுரனை வதைக்க உணவுப் பொருட்களை மாட்டுவண்டியில் கொண்டுவரும் சடங்கு) தென்னை மர, பனைமர உச்சியிலும் (அர்ச்சுனன் தவம் இருக்கும் இடம்) மண்தரைப் பரப்பிலும் ( துரியோதனன் மாண்டு கிடக்கும் வெளி ) என விரிந்து கிடக்கிறது நடிப்பின் நிகழ்விடம். ஊரே மேடையாக மக்கள் ஒரே நேரத்தில் பார்வையாளர்களாகவும் பங்கேற்பாளர்களாகவும் ஆகியிருக்கிறார்கள் இங்கு.
கூத்து தொழில் முறையாக ஆகியிராத காலத்தில் கிராமத்து மக்கள் சடங்கின் ஒரு பகுதியாக கூத்தைத் தன் விவசாயப் பணிகளை முடித்துவிட்டு வந்து இரவு முழுவதும் ஆடுவார்கள். பிற்பாடு தொழில்முறைக் குழுக்களால் ஆடக்கூடியதாக ஆகியது கூத்து. இரவு முழுவதும் நிகழ்த்தப்படும் கூத்து ஒரு நாள், பத்து நாள் என்று பல நாட்கள் தொடர்த்து நடத்தப்படுகிறது. கூத்தில் ஆடுபவரும் பங்கேற்பவரும் நம்பிக்கையின் வழி பல சடங்குகளோடு இதை நிகழ்த்துகின்றனர்.
நம் மரபுக் கலைகள் அனைத்தும் தாள இலயத்துடன் தொடர்புடையன என்பது நாமறிந்ததே. கூத்தும் அப்படியே. தாள, இலயம் பார்வையாளர்களை இலயிப்பில் ஆழ்த்தி நிகழ்வில் அவர்களைப் பங்கேற்கச் செய்கின்றது. இரவு முழுவதும் ஆடப்படும் கூத்தில் பார்வையாளர்களைத் தக்கவைத்துக் கொள்வதில் தாள இலயமும் தன் பங்கினை ஆற்றுகிறது. தாளத்தில் நடப்பதும் பாடுவதும் கூத்துக் கலைஞனுக்கு அதிமுக்கியம். உச்சரிப்பும் கருத்துத் தெளிவும் பாடுந்திறனும் கூத்துக் கலைஞனுக்கு பார்வையாளர்களிடம் அங்கீகாரத்தை எளிதாய்ப் பெற்றுத் தந்துவிடுகிறது.
ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்தைத் தான் வெளிப்படுத்தும் விதம் பற்றி புரிசை கண்ணப்பதம்பிரானை குருவாகக் கொண்ட கூத்தரான வேதாச்சலம் கூறும்போது, '' முகத்துல அந்தப் பவுடர் போட்டுக்கினு, அந்த வேஷம் கட்டிக்கினு நின்னோம் முன்னா, நாம என்னா... வேதாச்சலம்மில்ல... பீமனா ? பீமன். அந்த ஆர்வம். அந்த ஆர்வத்துல எப்படி நாம நடிக்கணும், பீமன் எப்படி இருக்கிறாங்கறது...பீமனாவே அந்த நடிப்பு முடியறவரைக்கும்... பொழுது விடிஞ்சு அதெ முடிச்சிகிட்டோம்னா அப்புறம்தான் அது நம்போ. இதுவரைக்கும் பீமன் என்னா, அவன் டியூட்டி என்ன, ஆர்ப்பாட்டம் என்னா? -ன்னு இருக்கணும்'' என்றார். ஏற்றுக் கொண்ட கதாபாத்திரம் பற்றிய மனவுருவோடு, அம்மனவுருக்கு ஏற்ற ஒப்பனை, உடை போன்றவற்றிலிருந்தும் உத்வேகம் பெற்று, சுயம் அழித்து, அந்தக் கதாபாத்திரமாகவே அதன் ஆர்ப்பாட்டத்தோடு வாழ்வது...என்பதாக இருக்கிறது அவரதுமுறை. அதன் வழி நடிப்பு என்பது ஒரு மனவழிச் செயல்பாடு என்பது தெளிவுக்கு வருகிறது.
திரௌபதி வஸ்திராபரணத் துகிலுரிப்புக் கூத்தில் துரியோதனனின் தொடையை பீமன் பிளக்கும் காட்சியிலும், திரௌபதி துரியோதனனின் ரத்தத்தால் தன் கூந்தலை மெழுகும் காட்சியிலும் பார்வையாளர்களில் சிலரும் பீமனாகவும் திரௌபதியாகவும் பாத்திரமேற்பவரும் சமயங்களில் ஆவேசநிலையை அடைந்துவிடுவதுண்டு. அவ்வாறு ஆவேச நிலையை அடைந்தோரை சூடமேற்றி, குங்குமம் அடித்து மக்கள் தொழுவதுண்டு. நடிகனும் பார்வையாளனும் முற்றிலும் நம்பிக்கையின்பாலும், உணர்ச்சியின்பாலும் ஆழ்ந்துபோகும் தருணங்கள் இவை. நடிகனை நம்பிக்கை ஆளுமை கொண்டுவிடுவது என்பது தொல்காலம் தொட்டு கூத்துக்காலம் வரை நேரக்கூடிய ஒன்றாகவே உள்ளது. ஆவேச நிலையில் அவனுள் இயக்கம் கொள்வது இறையாற்றலே என்ற நம்பிக்கை, இறைநம்பிக்கை சற்று பின்தள்ளப் பட்டிருக்கிற இக்கால கட்டத்தில்கூட, சடங்கின் அங்கமாக கூத்து நிகழ்த்தப்படும் பகுதிகளில் இருப்பதைக் காணமுடிகிறது .
நன்றி : malaigal.com
Subscribe to:
Comments (Atom)
