Wednesday, December 9, 2009



ஐந்திணை
-இயற்கை வளர் மையம்-




வணக்கம்.

இயற்கையின் பெருவல்லமையையும் பெருங்கருணையையும் மாறா நியதிக்குட்பட்ட அதன் பேரியக்கத்தையும் உள்ளபடி உணர்ந்து, பரவசித்து, வணக்கத்திற்கு உரியதாகவும் வணங்குதலுக்கு உரியதாகவும் இயற்கையைக் கண்டுகொண்டவன் தமிழன். நிலத்தின் தன்மையையும் வளமையையும் பட்டறிந்து குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று அதனை வகைப்படுத்தியமையோடு அவ்வவ் நிலத்தின் தன்மைக்கு ஏற்ப தமது வாழ்க்கை முறைமையையும் தகவமைத்துக் கொண்டவன் அவன். இயற்கையோடு அவனுக்கிருந்த நேசத்தையும் புரிதலையும் அவன்தன் வாழ்க்கை பிரதிபலித்தது என்பதோடு கலை, இலக்கியம் என்று சகல வெளிகளிலும் அவன் இயற்கையை ஆழ்ந்துணர்ந்தவைகளையும் ஆய்ந்தறிந்தவைகளையும் பதிவும் செய்திருக்கிறான்.

அத்தகைய நமது தமிழ்ச் சமூகத்தின் சிந்தனையும் செயல்பாடும் தற்போது ஆங்கில மயமாகியிருக்கிறது. இயற்கையை வெல்வதற்கான ஒன்றாய்க் கருதி அதனை எதிர்நிலைப்படுத்தும் மேற்கத்திய மனோபாவம் இப்போது நமதாகியிருக்கிறது. தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்று இயற்கையை கபளீகரம் செய்யும் போட்டியில் முனைப்போடு தன்னையும் ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறது தமிழ்ச் சமூகம். தமிழ்ச்சூழல் திரிபு பட்டுக் கொண்டு இருக்கறது. மேற்கத்திய மனோபாவத்தால் நிலமும் நீரும் காற்றும் மேலும் மேலும் மாசடைந்துவருகிறது. சுனாமி, குளோபல் வார்மிங் என்று உலகம் செய்வதறியாது தற்போது திகைத்து நிற்கிறது.

இது நாம் வசிக்கும் உலகம். நாமும் நமது சந்ததிகளும் உடல் ஆரோக்கியத்தோடும் மன ஆரோக்கியத்தோடும் பெருமகிழ்வோடு வாழவேண்டிய உலகம். மாறாய், வளர்ச்சி, நாகரீகம் என்கிற பெயரில் இயற்கையைக் காவு கொடுத்ததின் விளைவுகளை நாம் தற்போது சந்தித்து வருகிறோம். சுதாரிப்போம்! மரத்தின் நுனிக் கிளையில் அமர்ந்துகொண்டு கிளையை வெட்டும் அதிபுத்திசாலித்தனத்திலிருந்து முதலில் நாம் விடுபட, தமிழ்ச்சமூகம் கண்டடைந்திருக்கிற இயற்கை வழிபாடு, இயற்கை வேளாண்மை, இயற்கை உணவு, இயற்கை மருத்துவம் என்று தமிழ் வாழ்வியலை மீட்டெடுப்போம். அவ்வாறு தமிழ் அடையாளத்தை மீட்டெடுப்பதோடு, தமிழ்ச் சிந்தனையை உலகம் உய்வதற்கான வழிமுறையாய் முன்வைப்பதையும் நோக்கமாய்க் கொண்டு இயக்கம் கண்டிருக்கிறது ஐந்திணை- இயற்கை வளர் மையம். நல்லுலகக் கனவும் நம்பிக்கையும் செயலூக்கமும் உடைய யாவருக்குமான களம் இது.! வாருங்கள்! ஒரு துளியாய்க் கலந்து அலையாய் எழுவோம்!!


தமிழன்புடன்

-ஐந்திணை-

No comments:

Post a Comment