கருக்கல் கிளைத்த கதை
- சுரேஷ்வரன் -
- சுரேஷ்வரன் -
எனது அம்மாவின் அம்மாவின் பெயர் தங்கம்மாள். எங்களுக்கு அவர் ஆட்டம்மா. எங்களுக்கு என்றால் எனது குடும்பத்தவர்களுக்கு மட்டுமல்ல, அக்கம் பக்கத்தவர் மற்றும் எனது நெருங்கிய நண்பர்களுக்கும்தான். ஐந்தாம் வகுப்பு வரை நான் ஆழியாறில் அவரோடுதான். அவருக்குத் தொடக்கப் பள்ளியில் ப்யூனாக வேலை. இறைபக்தி அதிகம் அவருக்கு. வாரத்திற்கு ஏழுநாட்களும் என்பதுபோல் விரதமிருப்பார். தன்னையும் தனது சூழலையும் சுத்தமாய் வைத்திருக்க வேண்டும் என்பதில் கவனம் மிக்கவர். அதிகாலை 4 மணியிலிருந்து இரவு 11 மணிவரை சுறுசுறுப்பாய் இயங்கிக்கொண்டே இருப்பார். நன்றாக சமைப்பார். உணவுக் கட்டுப்பாடு இன்றுவரைக்கும் எனக்கு இயலாதவொன்றாய் இருப்பதற்கு அவர்தான் முதற்காரணம். விதவிதமாய் உணவு வகைகள், நொறுக்குத் தீனிகள். எனது சிறுவயது புகைப்படத்தில் கொழுக்மொழுக் என்றிருப்பேன் நான்.
பாசத்தைப் பொழியும் அதேவேளையில் கண்டிப்பும் மிக்கவர் ஆட்டம்மா. என்னையுமறியாமல் நான் கொண்டிருக்கும் சுத்தம் பற்றிய ப்ரக்ஞைக்கும் ஒழுக்கத்திற்கும் அன்று அவரது கண்டிப்பினால் நான் கடைப்பிடிக்க நேர்ந்தவைகளே அடிப்படை என்று உணர்கிறேன். அவரது கண்டிப்பான சுபாவத்தையும் என்மீது அவருக்கிருந்த பாசத்தையும் நன்கு அறிந்திருந்த எனது தொடக்கப் பள்ளி நண்பர்கள் என்னை அவர்களுடன் சேர்ந்துவிளையாட அனுமதிக்கப் பயப்படுவார்கள். எனக்கு ஏதேனும் சிறு சிராய்ப்பு என்றாலே போதும் அவர்கள் அவ்வளவுதான்.
பெரும்பாலும் மாலைவேளைகளில் நண்பர்கள் விளையாடும் பலவிதமான விளையாட்டுக்களை, இழுத்து அடைக்கப்பட்டு பூட்டு தொங்கிக்கொண்டிருக்கும் வீட்டின் அறைக்குள்ளிருந்து மரச்சட்ட சன்னல்வழி நான் பார்த்துக்கொண்டிருப்பேன். என் வயதொத்தவர்கள் ஆற்றில் குதித்து ஆடிக்கொண்டிருக்கும் போது நான் கரையில் நின்று ஒருசிறு கப்பில் நீர் அள்ளிக் குளித்துக் கொண்டிருப்பேன். இன்று வரைக்குமே எனக்கு நீச்சல் தெரியாது. அவரது பாசமும் கண்டிப்பும் எனக்குள் சாதகபாதகமான விளைவுகளையே ஏற்படுத்தியிருக்கிறது. அந்தப் பருவத்துக்கேயுரிய எத்தனையோக்களை இழந்துவிட்டிருந்தாலும் நான் கதைவெளிக்குள், கற்பனைப் பெரும் பரப்பிற்குள் மூர்க்கத்தோடு சிறகுவிரிக்க அவரே ஒரு பெருங்காரணம். விளையாட்டில் கிடைக்காத சந்தோஷத்தை கதைவெளிக்குள்ளிருந்து கூடுதலாகவே நான் திரட்டிக்கொண்டேன்.
எனது ஆட்டம்மா நல்ல கதைசொல்லி. பெரும்பாலும் புராணக் கதைகள். அவர்மட்டுமல்ல இரவு உணவுக்குபின் அவரோடு சேர்ந்து அரட்டை அடிக்கும் வசந்தாம்மா, சந்திராம்மா போன்றோரும்கூட சிறந்த கதைசொல்லிகள்தான். பெரியம்மை வந்து நான் படுத்திருந்த 3 மாத காலகட்டத்தில் எம்.ஜி.ஆர். நடித்த “நல்ல நேரம்” திரைப்படத்தின் கதையை ஒரு நூறு முறையாவது கேட்டிருப்பேன் எனது அம்மா மற்றும் பெரிய மாமாவிடமிருந்து. அவர்களுக்கு நல்ல நினைவாற்றல் உண்டு. என்தாய்வழி இரண்டாவது மாமா சொல்லும் கோழிக்கதைக்கு முடிவே கிடையாது, சிந்துபாத் கதைபோல! நல்ல நகைச்சுவை உணர்வு மிக்கவரவர். எனது தொடக்கப் பள்ளி நண்பர்கள் நடராஜ் மற்றும் முருகேசப் பாண்டியன் இருவரும் அக்கால கட்டத்தில் வெளியாகும் படங்களைப் பார்த்துவிட்டுப் பள்ளியின் இடைவேளை நேரங்களில் கதைசொல்லிகளாய் மாறிவிடுவர். சக்கரை மூட்டை வாத்தியார் (தொப்பை - நிறைய இனிப்பு சாப்பிடுவார் ) அவ்வயதில் எனக்கு மிகவும் பிடித்தமானவர்.அவர் வகுப்பு எடுத்து முடித்ததும் கதை கதையென்று நாங்கள் கத்துவோம். அவர் சொல்லத் துவங்கிவிடுவார். சிலவேளைகளில் முழுவகுப்பையும் கதையே எடுத்துக்கொள்ளும். இவர்களால் வளர்ந்தது என் கதையுலகம். இவர்களால் விரிந்தது என் கற்பனையுலகம்.
பள்ளியின் வாரவிடுமுறைதோறும் என்னைப் பொள்ளாச்சிக்குத் தவறாது கூட்டிச் செல்வார் ஆட்டம்மா. பொள்ளாச்சியிலிருந்து திரும்பும்போது பைநிறைய பூந்தளிர், அம்புலிமாமா, சிறுவர் மலர், காமிக்ஸ் என்று தருவார் எனது கடைசிமாமா. பாலகுமாரன், சுஜாதா என்று புதியதொரு வெளியை எனக்குத் காட்டித் தந்தவர் என் சித்தப்பா. சித்தி அவ்வப்போது கதைகள் வாசிப்பார். பக்கத்து வீட்டு சாந்தியக்கா, செல்வியக்காவிடமிருந்து வார மாத இதழ்களும் சாண்டில்யன், கல்கி போன்றோர்களின் படைப்புகளும் அப்போது வாசிக்கக் கிடைக்கும்.
கதை கேட்டு, கதை படித்து கற்பனையில் திளைத்த காலம் அது. பின்னர் அறிமுகமாகியது நூலகம். தமிழின் தீவிரமான படைப்புக்களும் மொழிபெயர்ப்புகளும் எனது வாசிப்பின் திசையை மாற்றியது. கற்பனை ஓட்டம் நிதானம் பெற்று, நிஜ உலகைக் கூர்ந்து அவதானிக்க உத்வேகமூட்டிய படைப்புகள் பரிச்சயமானது. என்னையும் என்னைச் சுத்தியுள்ள உலகையும் எனக்கு அடையாளம் காட்டிய படைப்புகள் அவை.
கிளர்ச்சிக்காக, பொழுதுபோக்கிற்காக வாசிப்பு நிகழ்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில் எனது நணபர்கள் வட்டத்தில் கவிஞனென்று எனக்கு முதலில் அறிமுகமானவன் செந்தில். அவனது காதல் தெறிப்புக்களுக்கு முதல் வாசகனானேன். சமயங்களில் நானும் எதையாவது கிறுக்கத் துவங்கினேன். செந்திலின் வழி டெல்லி ஆனந், மௌனம் இரமேசு அறிமுகமானார்கள்.
முதன் முதலில் ஒரு சிற்றிதழானாய் எனக்கு அறிமுகமானவன் மு.சிவசுப்ரமணியன். ஒருதேர்ந்த மொழியும் நடையும் அப்போதே வாய்க்கப்பெற்றிருந்தானவன். அவன்வழி அறிமுகமான பாலசிங், கோபாலகிருஷ்ணன், சிவக்குமார், அபுபக்கர் என்று இலக்கியம் சார்ந்த நட்புலகம் மேலும் விரிந்தது. தமிழி, பௌர்ணமி என்று இதழ்களை இணைந்து நடத்தினோம். முதன்முதலாய் எனது எழுத்தை அச்சில் பார்த்துப் பரவசித்திருந்த நாட்கள் அவை. அக்கால கட்டத்து எனது எழுத்தை இப்போது வாசிக்கநேர்ந்தால் நிச்சயம் சிரிக்கத் தோன்றும். ஆயினும் அது என் எழுத்து.
புன்னகை அம்சு, செ. இரமேஷ்குமார், ஸ்நேகிதன், சேது, தி. இரவிக்குமார், தனியன், செந்தில்முருகன், ஸ்ரீநான். மணிகண்டன் என நட்புலகம் விரிவு கொண்டது. கல்லூரி முடிந்து கூத்துப்பட்டறையில் இணைந்தேன். இக்காலகட்டத்தில் எனது வாசிப்புவெளியும் விரிவுகண்டிருந்தது. எழுத்தும் பரவாயில்லை எனுமளவிற்கு இருந்தது. கூத்துப்பட்டறை அனுபவமும் கூத்துப்பட்டறை தாண்டி எனக்குக் கிடைத்த நண்பர்கள் வட்டமும் நா. முத்துசாமியுடன் நிகழ்ந்த உரையாடல்களும் படிக்கக் கிடைத்த புத்தகங்களும் எனது பார்வையை பெரிதும் மாற்றியிருந்தன. இந்தப் பின்னணியில் ஒரு இதழை தொடங்கி நடத்தவேண்டும் என்கிற எண்ணம் கருக்கொண்டது. சமூக அக்கறையோடும் தீராத கலை இலக்கியத் தாகத்தோடும் செயல்படுவர்களுக்குக் களமாக “கருக்கல்” உருக்கொண்டது.
கருக்கல் முதல் இதழிலிருந்தே யாருடைய படைப்பு என்பதைவிட படைப்பின் உருவம், உள்ளடக்கம் குறித்த பார்வையே முதன்மைப் படுத்தப்பட்டிந்ததாய் உணர்கிறேன். இதனால் சில நண்பர்களை இழக்க நேர்ந்தது. பல நல்ல நண்பர்களின் தொடர்பும் கிட்டியது. மாத இதழென ஆரம்பித்து, காலாண்டிதழாகி, அரையாண்டிதழாகி, பிற்பாடு காசு உள்ளபோது வெளிவரும் இதழாகியிருக்கிறது. இதழ் எப்போது வெளிவரும் என்று உறுதிபடத் தெரியாததால் சந்தாத் தொகை பெறுவதில்லை. கருக்கல் இதழ் வெளிவருவதில் என்னைவிடத் தீவிரம் கொண்டிருக்கிற ஒரு எழுத்துலக நட்பு வட்டமும் வாசக வட்டமும் இருப்தனாலேயே கருக்கல் இன்னமும் உயிர்ப்போடு வெளிவந்துகொண்டிருக்கிறது. குறிப்பாக, இளங்கோ கிருஷ்ணன், இசை, இளஞ்சேரல் போன்றோரின் பங்களிப்பு பெரிதினும் பெரிது.
“கருக்கல்” சிற்றிதழோடு “கருக்கல் திரைப்பட இயக்கம்” ஒன்றையும் நடத்திவருகிறோம். “சிண்டும் சிக்கலும் மிக்கதாய் மாறிப்போயிருக்கிற நவீன காலச் சூழலில் நிஜத்திற்கும் நமக்கும் இடையே ஒரு தடையாய் இல்லாது உள்ளதை உள்ளபடி காட்சிப்படுத்துவதாய் இருக்க வேண்டும் திரை” என்கிற நோக்கில் இயக்கம் கொண்டிருக்கிறது அது. உலகின் நல்ல திரைப்படங்களை, குறும்படங்களை, ஆவணப்படங்களை மாதந்தோறும் தொடர்ந்து திரையிட்டு வருகிறோம். அத்தோடு நாடகப் பயிற்சி, நடிப்புப் பயிற்சி, ஆளுமைத் திறனூக்கப் பயிற்சி, குறும்படப் பயிற்சி என்று பல்வேறு தளங்களிலும் கருக்கலின் செயல்பாடு இருந்துவருகிறது. அவை குறித்துப் பின்னொரு சந்திப்பில் பேசுவோம். கருக்கல் குறித்த விமர்சனங்களையும் உங்கள் படைப்புகளையும் அனுப்பிவையுங்கள். நட்புடன் விடைபெறுகிறேன்.
karukkalsureshwaran@gmail.com
No comments:
Post a Comment