Monday, June 27, 2016

திசைகளைத் துளைக்கும் பேரோலம் !!

Hush ! Girls Don’t Scream


கொலை, கொள்ளை, சாலை விபத்துக்களை முந்திக்கொண்டு தற்போது தினசரிகளில் செய்தியாகிவிட்டிருப்பது குழந்தைகள் பாலியல் ரீதியான வன்கொடுமைக்கு ஆளாகிக்கொண்டிருப்பது. தமிழ், இந்தியச் சூழல்களில் மட்டுமல்லாமல் உலகளவிலான பிரச்சனையாகவிருக்கிறது இது. காமம் குறித்த சரியான புரிதலின்மை என்பது ஒருபுறமிருக்க, பெற்றோர்கள் துணிந்து இத்தகையக் குற்றங்களைப் புகாராகப் பதிவுசெய்ய முன்வராமை இவ்வீனச்செயல்பாடு பெருகிப்போக முக்கியமானதொரு காரணம். தற்போது ஈரானின் Pourān Derakh'shandeh –ன் இயக்கத்தில் வெளிவந்திருக்கிற ‘’Hush ! Girls Don’t Scream‘’ எனும் திரைப்படம் இப்பிரச்சனை குறித்து வெகுகாத்திரமாக பதிவு செய்திருக்கிறது. போரான் அடிப்படையில் ஒரு ஆவணப்பட இயக்குநர். ப்ளேக், போதை வஸ்துக்களின் விளைவுகள் போன்ற பல்வேறு பிரச்சனைகள் குறித்தும் ஆவணப்படமெடுத்திருக்கிறார். பல்வேறு விருதுகளையும் பெற்றிருக்கிறார். போரானின் பொறுப்புணர்வும் சிரத்தையும்  ‘’Hush ! Girls Don’t Scream‘’ திரைப்படத்தில் வெகுஅழுத்தமாய் வெளிப்பட்டிருக்கிறது.

வெள்ளுடையில் இரத்தம் படிய மணமகன் முன் முகம் வெளிர நிற்கிறாள் மணப்பெண். படம் இப்படித்தான் ஆரம்பிக்கிறது. எண்ணற்ற கேள்விகளை முதல் காட்சியிலேயே பார்வையாளர்களுள் எழுப்பிவிட்டு, அவர்களைத் தன்னுள் ஈர்த்துக்கொண்டு, விறுவிறுவென நகர்கின்றது இத்திரைப்படம். மணப்பெண் ஷெரின் கொலைக் குற்றத்திற்காகக் கைது செய்யப்படுகிறாள். விசாரணையின்போது கேள்விகளுக்கு பதிலிருக்காது மவ்னம் சாதிக்கிறாள். அவளது பெற்றோர் பெண் வழக்கறிஞர் ஒருவரை அணுகி ஷெரின் சார்பாக வழக்காடும்படிக் கொருகின்றனர். வழக்கறிஞரின் சாமார்த்தியம் செல்லுபடியாக, ஷெரின் வாய்திறக்கிறாள். கொலையைச் செய்தது அவள்தான் என்பதை ஷெரின் ஒத்துக்கொள்கிறாள்அதற்கான காரணம் குறித்தக் கேள்விகளுக்கான பதில்களாக ஷெரினின் கடந்த கால வாழ்க்கை காட்சிகளாய் விரிகின்றன. சிறுவயதில் தான் பள்ளிக்கூடத்திற்குப் போகவர உதவிக்கென நியமிக்கப்பட்டவரால் பாலியல் ரீதியாக தான் வன்புணர்வுக்கு ஆளாதையும் அதுகுறித்து அவளது பெற்றோர்களிடமும் பள்ளி ஆசிரியைகளிடமும் கூற அவள் எடுத்த முயற்சிகள் அவர்களால் அலட்சியமாக தோல்விக்குள்ளானதையும் நெஞ்சு பதைக்கப் பகிர்கிறாள்.    அவளுள் வடுவாகிவிட்டிருந்த அந்தச் சம்பவம் மணப்பெண்ணிற்கான ஆடைகளை எடுக்கச்சென்ற இடத்தில் சிறுமியொருத்தியை பலாத்காரத்திற்கு உள்ளாக்க முயன்ற காமுகனொருவனால் கிளரப்பட, ஆற்றாது அவனைத் தான் கொன்றதாக அவள் கூறுகிறாள்.

சிறுமியைக் காத்தலின் பொருட்டு நிகழ்ந்த கொலை அதுவென அவளுக்கான வழக்கறிஞர் வாதாடுகிறார். காரணம் எதுவாக இருப்பினும் தண்டணையை தனிநபர்கள் அளிக்கத் துவங்கினால் காவல் துறையும் நீதித்துறையும் தனக்கான முக்கியத்துவத்தை இழக்க நேரிடும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தை முன்வைக்கிறார். போதாக்குறைக்கு ஆடையகத்திற்கருகில் ஷெரினால் காப்பாற்றப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் அவர்களது குழந்தையை வன்புணர்ச்சிக்கு ஆளாக்கியவனுக்கு எதிராக காவல் துறையிடம் புகாரளிக்க முன்வராது போக, நீதிமன்றம் ஷெரினைப் பாலியல் பலாத்காரத்திற்கு ஆக்கியவனோடு சேர்த்து ஷெரினுக்கும் கொலைக்குற்றத்திற்கான தண்டனையை அளிக்கிறது.

ஷெரினின் வழக்கறிஞர் குற்றம் செய்தவரோடு சேர்த்து குற்றம் செய்யத் தூண்டியவர்கள் என்றளவில், அவளுக்குள்ளிருந்த தீரா மன அழுத்தத்திற்குக் காரணமானவர்கள் என்ற வகையில், அவளது பெற்றோர்களும் ஆசிரியைகளும் பாலியல் சார்ந்த புரிதலற்ற நிலைக்காய் சமூகத்தையும் பொருப்பாக்கி ஒட்டுமொத்த சமூகத்தையும் சேர்த்தே தண்டிக்கவேண்டும் என வாதிடுகிறார். சந்தர்ப்பம், சூழ்நிலை, சாட்சிகள் என்பதைத்தான் நீதித்துறை கவனத்தில் கொண்டாக வேண்டியுள்ளது என்று நீதித்துறையும் காவல்துறையும் கையைப் பிசைகிறதுஷெரினுக்கான வழக்கறிஞர் சட்ட ரீதியாக ஷெரினுக்கு நீதி கிடைக்க இருக்கின்ற வழிகள் அனைத்தையும் முயற்சித்துப்பார்க்கிறார். நிகழ்வுகள் ஒவ்வொன்றும் இறுக்கமாக இறுக்கமாக ஷெரின் முதன் முறையாக பெருக்குரலெடுத்து அலறுகிறாள். பெண் என்றாலே ‘’உஷ்ஷ்... சத்தம் போடாதே, அமைதியாயிரு’’ என்று அடக்கம் பழக்கும் வழக்கத்திற்கெதிரான எதிர்ப்புக்குரலாக, வீரியத்தோடு எட்டுதிக்கும் அதிர ஒலிக்கிறது சட்டத்தின்முன் சகலத்தாலும் கைவிடப்பட்ட அப்பெண்ணின் பேரலறல் !!


-சுரேஷ்வரன்-
24.12.2013
நன்றி - நிழல்


No comments:

Post a Comment