Saturday, June 4, 2011


 

எரியும் நகரம்

 


சுறாக்களின் மேய்ச்சல் வெளியிலிருந்து
தப்பி வந்த அவனிடம்
சுவாரஸ்யங்கள் நிறைந்த கதைகள் இருக்கக் கூடும்
என்று எவரோ சொல்ல
நகரமே திரண்டு நின்றது அவனை வரவேற்க

இடுங்கிய கண்களும் உலர்ந்த நாவும்
மெலிந்த தேகமுமானவன்
தனது நீண்ட கைகளை நீட்டியபடி
மக்களை நெருங்கி மூர்ச்சையானான்

பொறுமையோடு காத்திருந்த அம்மக்கள்
அவனது இமைகளின் அசைவையும்
உதடுகளின் துடிப்பையும் கண்ணுற்ற கணத்தில்
கதைகதையென்று ஆவல் மேலிட ஆர்ப்பரிக்கத் துவங்கினர்

இடுங்கிய அவ்விரு கண்களும்
கடலுக்கு அப்பால் எங்கோ குத்திட்டு நிற்க
உலர்ந்த அவன் நாவிலிருந்து கசியலாயிற்று
எரியும் நகரம் பற்றிய ஒரு கதை

உறங்கும் குழந்தைகளின் கனவுகள்
வெடிச்சத்தத்தில் தகர்க்கப்பட
பதறி எழும் அவை பதுங்கு குழிக்குள்
சிதைந்த தலையொன்றையும்
தெறித்து விழும் சதைத்துணுக்குகளையும்
மிரண்ட விழிகளோடுத் துழாவி
பீதியுற்றலரும் சித்திரமொன்றும்...

நகரத்தின் நடுமையத்தில்
ஆடை களைந்து உறுப்புக்களைச் சிதைத்து
வரிசையாகக் கிடத்தப்பட்டிருக்கும்
பிணங்களின் பாலுறுப்பைக் குதறிச் சிரிக்கும்
குறிகளின் சித்திரமொன்றும்...

உயிரோடு எரியும் உடல்களின் பொசுங்கல் நெடிக்கு
இடம் பெயர்ந்தோடும் பறவைகளின் சித்திரமொன்றும்...

பேய்மழைக்கு அடிபெயரந்து விழும் பெருமரமென
அவனது வார்த்தைகளுக் குள்ளிருந்து விஸ்வரூபிக்க,

தனது உச்ச கட்ட பொறுமையைக் களைந்து
அம்மக்கள் ஆளுக்கொரு திசையில் தேடலாயினர்
சுவாரஸ்யங்கள் எதுவுமற்ற அவனின் கதைக்காய்
ஆகச்சிறந்த கழுமரம் ஒன்றை

அசுவாரஸ்யங்கள் மிக்க சித்திரங்களை பெருத்த
ஆற்றாமையோடு தனது நினைவிலிருந்து
உருவியபடியே இருக்கிறானவன் இன்னமும்

நன்றி : அகத்துறவு

No comments:

Post a Comment