Wednesday, October 30, 2013



கலைமாமணி கண்ணப்ப தம்பிரான் 10 -ஆம் ஆண்டு நினைவு நாடகக் கலை விழா கடந்த அக்டோபர் 5 மற்றும் 6 திகதிகளில்   புரிசையில் நடைபெற்றது.  அரசு, பாரி, ஜீவா, மோகன் மற்றும் சிவாவுடன் ஆவணப் படமாக்கலுக்கான நோக்கோடு இரண்டாம் நாள் இரவு 10.00 மணி அளவில் அங்கு சென்றடைந்தோம். உணவு விடுதி இல்லாத குறையைக் களைய விழாக் குழுவே உணவு ஏற்பாட்டினைச் செய்திருந்தது நன்று.  

புரிசை துரைசாமி கண்ணப்பத் தம்பிரான் பரம்பரை தெருக்கூத்து மன்றத்துடன் இணைந்து இலங்கை மட்டக்கலப்பைச் சேர்ந்த சூர்யா கலைக் குழுவால்  முழுக்கவும் பெண்களைக் கொண்டு 'பெண் அலை' என்கிற கூத்து துவங்கியது. திரு.எஸ்.எம். வெங்கடேசன் அவர்களின் பிரதியை கலைமாமணி கண்ணப்ப சம்பந்தன் அவர்கள் இயக்கியிருந்தார். மங்கை அவர்களின் சிரத்தையால் சாத்தியமாகி இருந்தது அக்கலாச்சாரப் பரிவர்த்தனை ! நல்ல முயற்சி !!

பேசும் பறை கலைக் குழுவினரின் பறை அடிப்பும் ஆட்டமும் அடுத்து நிகழ்ந்தது. நான்கு பெண்கள் நான்கு ஆண்கள் என இளைய தலைமுறையினரின் கலைத்திறனால் உடலையும் மனதையும் ஜிவ்வெனப் பற்றிக் கொண்டு ஆட்டுவித்தது பறை இசை !

சுமார் 2 மணி அளவில் கண்ணப்ப சம்பந்தன் அவர்களின் குழுவினரால் 'வாலி வதம்' கூத்து துவங்கியது. காலை 6 மணிவரை நீண்டு முடிந்தது. கண்ணப்ப சம்பந்தன் அவர்களின் நெறியாளுகையில் இந்திரஜித் கூத்தில்  நான் பாத்திரம் ஏற்று நடித்துள்ளேன். அந்த அனுபவம் இடையிடையே நினைவில் மினுங்கிக் கொண்டே இருந்தது. அற்புதமான ஆசான் அவர் !  வாலி, சுக்ரீவன், அனுமன், இராம இலக்குவணன் என்று மானுட அறங்கள் கதாப்பாத்திரங்களாக உருக்கொண்டு அந்த இரவில் ஒளிர்ந்தது.

மரபில் வேரூன்றி நவீனத்துள் கிளைபரப்பி இன்னமும் உயிர்ப்போடு இயங்கிவரும் தமிழர் கலை வடிவம் 'கூத்து' ! வாலி வதம் கூத்து நிகழ்வில்  மகுடிக்கு கட்டுண்ட அரவம் போல  முழு இரவும் விழித்திருந்து கண்டு பரவசித்த அனுபவம் குறித்து எண்ணுந்தோறும் அலாதி இன்பம்  !  கலைக்கான அர்ப்பணிப்போடு வாழ்ந்து வரும் அக்கலைஞர்களை வணங்குகிறேன்.

..................................................................................................................................................... சுரேஷ்வரன்

No comments:

Post a Comment